ஹிஜாப் விவகாரம்: பள்ளி, கல்லூரிகளுக்கு மத அடையாளங்களுடன் மாணவர்கள் வரக் கூடாது: கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

ஹிஜாப் சர்ச்சை தொடர்பான வழக்கை விசாரித்து வரும் கர்நாடக உயர்நீதிமன்ற அமர்வு, பள்ளி, கல்லூரிகளுக்கு மத அடையாளங்களுடன் மாணவர்கள் வரக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஹிஜாப் விவகாரம்: பள்ளி, கல்லூரிகளுக்கு மத அடையாளங்களுடன் மாணவர்கள் வரக் கூடாது: கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

பெங்களூரு: ஹிஜாப் சர்ச்சை தொடர்பான வழக்கை விசாரித்து வரும் கர்நாடக உயர்நீதிமன்ற அமர்வு, பள்ளி, கல்லூரிகளுக்கு மத அடையாளங்களுடன் மாணவர்கள் வரக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஹிஜாப் சர்ச்சை தொடர்பான வழக்கை கூடுதல் அமர்வுக்கு மாற்றி கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித் புதன்கிழமை உத்தரவிட்டிருந்தார். அதன்படி, கர்நாடக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித்,  நீதிபதி காஜி ஜெய்புனிசா மொய்தீன் ஆகியோர் அடங்கிய கூடுதல் அமர்வு அமைக்கப்பட்டது.
ஹிஜாப் தொடர்பாக முஸ்லிம் மாணவிகளால் தாக்கல் செய்யப்பட்டிருந்த 7 மனுக்கள், 2 இடைசேர்ப்பு மனுக்களை இந்தக் கூடுதல் அமர்வு வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. 
மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் தேவதத் காமத், சஞ்சய் ஹெக்டே ஆகியோர் வாதிட்டனர். ஹிஜாப் அணிந்துகொண்டு கல்லூரிகளுக்கு வருகை தர மாணவிகளுக்கு அனுமதிஅளிக்குமாறு அவர்கள் கோரினர். 
""ஹிஜாப் அணிவது மத நம்பிக்கையின் ஒரு பகுதி என்பதால், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 19(1)(ஏ)-இன்படி ஹிஜாப் அணிவது தனிப்பட்ட உரிமை. எனவே, ஹிஜாப் அணிவதற்கு சீருடை சட்டம் தடையாக இருக்க முடியாது'' என்று அவர்கள் வாதிட்டனர்.
அரசு தலைமை வழக்குரைஞர் பிரபுலிங் கே.நவடகி வாதிடுகையில், "ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாகவும் எதிராகவும் சலசலப்பு ஏற்பட்டுள்ளதால், பள்ளிகள், கல்லூரிகளுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நிலைமை சீராவதற்கான முன்னேற்பாடுகள் நடந்துள்ளன. சீருடை தொடர்பாக அரசு புதிய ஆணை எதையும் பிறப்பிக்கவில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். மாணவர்கள் கல்லூரிக்கு வர வேண்டும் என்பதே மாநில மக்களின் விருப்பம்' என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க விரும்புவதாகத் தெரிவித்தனர். தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி வாய்மொழியாகக் கூறிய உத்தரவில் குறிப்பிட்டிருப்பதாவது:
மாநிலத்தில் அமைதியும் நிம்மதியும் திரும்ப வேண்டும். கல்வி நிறுவனங்களைத் திறக்க வேண்டும். பள்ளிகள், கல்லூரிகளுக்கு மத அடையாளங்களுடன் வருமாறு மாணவர்களை வற்புறுத்தக் கூடாது. கல்விப் பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும். 
நீதிமன்றத்தின் முன்பாக இருக்கும் வழக்கை விரைவாக விசாரிக்க உள்ளோம். மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் ஏற்பாடு செய்யப்படும். எவ்விதத் தொந்தரவும் இல்லாமல் கல்வி நிறுவனங்கள் உடனடியாகத் திறக்கப்பட வேண்டும். 
இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகும் வரையில், தற்போதைக்கு பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஹிஜாப் அல்லது காவித்துண்டு போன்றவற்றை அணிந்துகொண்டு மாணவர்கள் வரக் கூடாது. 
அடுத்த விசாரணை, பிப். 14-ஆம் தேதி நண்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இந்த வழக்கில் தினமும் விசாரணை நடத்த நீதிமன்றம் தயாராக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com