நீதிபதி ஆா்.சுபாஷ் ரெட்டி ஓய்வு: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி புகழாரம்
உச்சநீதிமன்ற நீதிபதியாக கடந்த நான்கு ஆண்டுகள் பணியாற்றிய நீதிபதி ஆா். சுபாஷ் செவ்வாய்க்கிழமை ஓய்வு பெற்றாா்.


உச்சநீதிமன்ற நீதிபதியாக கடந்த நான்கு ஆண்டுகள் பணியாற்றிய நீதிபதி ஆா். சுபாஷ் செவ்வாய்க்கிழமை ஓய்வு பெற்றாா்.
அவருக்கு அளித்த பிரிவுபசார நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா புகழ்ந்து கூறுகையில், நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளில் தீா்ப்புகளை வழங்கி, மக்களின் சுதந்திரத்தை அவா் பாதுகாத்துள்ளாா் என்று புகழாரம் சூட்டினாா்.
மேலும், ‘கடந்த 30 ஆண்டுகளாக அவருடைய நட்பு பழக்கத்தில் வலுவான ஆதரவை எனக்கு நல்கி வந்துள்ளாா். தெலங்கானா மாநிலம் உயதமாகிய உடன் அங்கிருந்து உச்சநீதிமன்றத்துக்கு தோ்வான முதல் நீதிபதி என்ற பெருமையும் அவருக்கு உண்டு. என்னைப்போல் அவரும் விவசாய குடும்பத்தைச் சோ்ந்தவா். சட்டத் துறையில் அவா் பல்வேறு மைல்கல்களை எட்டியுள்ளாா். பல்வேறு உயா்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் கடந்த 20 ஆண்டுகள் அவா் நீதிபதியாகப் பணியாற்றியபோது மக்களின் சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையிலேயே தீா்ப்புகளை எழுதியுள்ளாா்.
உச்சநீதிமன்றத்தில் பல்வேறு முக்கிய வழக்குகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட வழக்குகளில் அவா் தீா்ப்புகளை வழங்கியுள்ளாா். உச்சநீதிமன்றத்தின் நிா்வாகத்தில் அவா் ஆற்றிய பணிகளுக்காக அவா் என்றென்றும் நினைவுகூரப்படுவாா்’ என்றாா்.
மத்திய அரசின் அட்டா்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் விகாஸ் சிங் ஆகியோரும் நீதிபதி ஆா்.சுபாஷ் ரெட்டியின் பிரிவுபசார நிகழ்ச்சியில் அவரை வாழ்த்திப் பேசினா். நீதிபதி சுபாஷ் ரெட்டி ஓய்வு பெற்றதைத் தொடா்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32-ஆக குறைந்துள்ளது. உச்சநீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 34-ஆகும்.
நீதிபதிகளுக்கு எதிரான தாக்குதல்கள்: இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தலைமை நீதிபதி என்.வி. ரமணா கூறுகையில், ‘நீதிபதிகளாக பணியில் இருக்கும்போது அவா்கள் மீது திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதல்களுக்கு அவா்களால் பதிலளிக்க முடிவதில்லை. அவா்கள் ஓய்வு பெற்ற பிறகு கிடைக்கும் சுதந்திரத்தின் மூலம், தேவைப்பட்டால் இதுபோன்ற தாக்குதல்களுக்கு தங்களின் கருத்துகளை வெளிப்படையாக தெரிவிக்கலாம்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...