

தலைநகர் புது தில்லியில், காஸிபூர் மலர் சந்தையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டில் இருக்கும் வெடிபொருள்கள் பாகிஸ்தானிலிருந்து கடத்திவரப்பட்டது என்று புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
காஸிபூரில், பயங்கரவாத குழுக்களின் ஆள்களாகச் செயல்படுவோரால் வைக்கப்பட்டு டேப்பால் சுற்றப்பட்டு கண்ணிவெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட வெடிபொருளின் எடை 1.5 கிலோ கிராம் இருக்கும். ஆர்டிஎக்ஸ் மற்றும் அம்யூனியம் நைட்ரேட் ஆகியவற்றின் கூட்டுச் சேர்க்கை மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியிருக்கும். இந்த வெடிபொருள்கள் அனைத்தும் தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு பயங்கரவாதிகளின் ஆள்களாகச் செயல்படும் நபர்கள் மூலமாகக் கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும் என்று புலனாய்வுத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க.. சென்னையின் கரோனா பரவுவதில் ஏற்பட்ட மாற்றம்: காரணம் இதுதான்!
மேலும், கடந்த ஒரு சில மாதங்களாக, இந்திய எல்லைப் பகுதியில் டிரோன்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. டிபன் பாக்ஸ் வெடிகுண்டு உள்ளிட்டவற்றை, இந்திய எல்லைக்குள் டிரோன்கள் மூலம் கொண்டு வந்து பயங்கரவாதிகள் போடுகிறார்கள். பல டிபன்பாக்ஸ் வெடிகுண்டுகள் இன்னமும் கண்டறியப்படாமலேயே உள்ளன. அவைதான் தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு பயங்கரவாதக் குழுக்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது என்று சந்தேகம் எழுந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
கடந்த வாரம் தில்லி காஸிபூர் மலர் சந்தையில் வெடிகுண்டு குறித்த தகவல் கிடைத்ததையடுத்து, தில்லி காவல் துறை வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் நிபுணர் குழுவை சம்பவ இடத்துக்கு அனுப்பி வைத்தது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வாகனங்களும் அனுப்பிவைக்கப்பட்டன. இதன் தீவிரத்தன்மையை உணர்ந்து தேசியப் பாதுகாப்புப் படையினரும் அனுப்பிவைக்கப்பட்டனர்.
தேசியப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: "காஸிபூரில் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை தேசியப் பாதுகாப்புப் படையின் வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் நிபுணர் குழு செயலிழக்கச் செய்தது. இதன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள ரசாயனங்கள் குறித்து பின்னர் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.