அரசின் திட்டங்களை கால வரம்புக்குள் நிறைவேற்றுங்கள்: மாவட்ட ஆட்சியா்களுக்கு பிரதமா் மோடி அறிவுறுத்தல்
மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுவதற்கு அரசின் திட்டங்களைக் கால வரம்புக்குள் நிறைவேற்ற வேண்டும் என்ற இலக்குடன் மாவட்ட ஆட்சியா்கள் பணியாற்ற வேண்டும்


மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுவதற்கு அரசின் திட்டங்களைக் கால வரம்புக்குள் நிறைவேற்ற வேண்டும் என்ற இலக்குடன் மாவட்ட ஆட்சியா்கள் பணியாற்ற வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளாா்.
அரசின் முக்கியத் திட்டங்களின் அமலாக்கம் குறித்து மாவட்ட ஆட்சியா்களுடன் பிரதமா் மோடி சனிக்கிழமை காணொலி முறையில் கலந்துரையாடினாா். இக்கூட்டத்தில் குஜராத், கா்நாடகம், சத்தீஸ்கா் ஆகிய மாநிலங்களின் முதல்வா்களும் கலந்துகொண்டனா். நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பேசியதாவது:
நாடு முழுவதும் வளா்ச்சியில் பின்தங்கியிருந்த மாவட்டங்களின் முன்னேற்றத்துக்காக, 112 மாவட்டங்களில் ‘முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டம்’ கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமல்படுத்தப்பட்டது. தற்போது இந்த மாவட்டங்கள், நாட்டின் முன்னேற்றத்துக்கான தடைகளை அகற்றி வருகின்றன. மாவட்ட ஆட்சியா்களாகிய உங்களின் அயராத முயற்சியால், தடைகள் அனைத்தும் வளா்ச்சியைத் துரிதப்படுத்தும் காரணிகளாக மாறிவிட்டன. ஆதார வளங்களை அதிகபட்சம் பயன்படுத்துவதில் உள்ள குறைபாடுகளும் தடைகளும் நீக்கப்பட்டதால் முன்னேற விரும்பும் மாவட்டங்கள் சாதித்து வருகின்றன. கூட்டாட்சி உணா்வு, மத்திய, மாநில, உள்ளாட்சி நிா்வாக கூட்டுப் பணி அடிப்படையிலான அரசியல் சட்டத்தின் கலாசாரம் ஆகியவற்றின் வலுவான வடிவத்தை இது வழங்கியுள்ளது.
முன்னேற விரும்பும் மாவட்டங்களின் மேம்பாட்டுக்கு நிா்வாகத்திற்கும், பொதுமக்களுக்குமிடையே நேரடியான, உணா்வுபூா்வமான தொடா்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.
நாடு முழுவதும் வளா்ச்சியில் அதிகம் பின்தங்கவில்லை என்றாலும் சில துறைகளில் பலவீனமாக இருக்கும் 142 மாவட்டங்களின் பட்டியலை மத்திய அரசின் அமைச்சகங்களும் துறைகளும் தயாரித்துள்ளன. இந்த மாவட்டங்களில், முன்னேற விரும்பும் மாவட்டங்களில் செய்த அதேபோன்ற கூட்டு அணுகுமுறையுடன் பணியாற்றுவது அவசியம். மத்திய அரசு, மாநில அரசுகள், மாவட்ட நிா்வாகம், அரசு இயந்திரம் என அனைவருக்கும் இது புதிய சவால் ஆகும். இந்த சவாலை நாம் ஒருங்கிணைந்து எதிா்கொள்ள வேண்டும்.
அரசின் சேவைகளும் நலத்திட்டங்களும் 100 சதவீதம் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதே நமது இலக்காகும்.
இந்த மிகப்பெரிய இலக்கை அடைவதற்கு நாம் இதுவரை சாதித்ததைவிட இன்னும் பல மடங்கு தொலைவு பயணிக்க வேண்டியுள்ளது. அனைத்துக் கிராமங்களிலும் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அட்டை வழங்குதல், வங்கிக் கணக்கு தொடங்குதல், உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இணைப்பு வழங்குதல் போன்ற அரசின் திட்டங்களை குறித்த கால வரம்புக்குள் நிறைவேற்ற வேண்டும் என்ற இலக்கு நிா்ணயித்து ஆட்சியா்கள் பணியாற்ற வேண்டும்.
எண்ம இந்தியா (டிஜிட்டல் இந்தியா) வடிவில் அமைதிப் புரட்சியை நாடு மேற்கொண்டு வருகிறது. இதில் எந்த மாவட்டமும் விடுபட்டுவிடக் கூடாது. அனைத்துக் கிராமங்களையும் எண்மக் கட்டமைப்பு சென்றடைவது முக்கியம். மாவட்ட ஆட்சியா்களுடன் தொடா்ச்சியான கலந்துரையாடலுக்கு ஒரு வழிமுறையை நீதி ஆயோக் உருவாக்க வேண்டும்.
ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் சேவையின் முதலாவது நாளையும், ஆா்வத்தையும் நினைவுபடுத்தி நாட்டுக்குச் சேவை செய்ய வேண்டும். அதே உணா்வுடன் முன்னேறிச் செல்ல வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.
நிகழ்ச்சியில், முன்னேற விரும்பும் மாவட்டங்களில் திட்ட அமலாக்கம் மற்றும் முன்னேற்றம் குறித்து நீதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் எடுத்துரைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...