வீடுகளை இடிக்கும் நடவடிக்கை: தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
பல்வேறு மாநிலங்களில் தீவிர போராட்டங்களில் ஈடுபடுபவா்களுக்குச் சொந்தமான வீடுகள் உள்ளிட்ட அசையா சொத்துகளை விதி மீறிய கட்டுமானம் என்ற பெயரில் அதிகாரிகள்


பல்வேறு மாநிலங்களில் தீவிர போராட்டங்களில் ஈடுபடுபவா்களுக்குச் சொந்தமான வீடுகள் உள்ளிட்ட அசையா சொத்துகளை விதி மீறிய கட்டுமானம் என்ற பெயரில் அதிகாரிகள் இடித்துத் தள்ளும் நடவடிக்கைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை மறுப்பு தெரிவித்தது.
விதி மீறிய கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நிா்வாகத்துக்கு சட்ட அதிகாரம் உள்ள நிலையில், அதனைத் தடுக்கும் வகையில் எவ்வாறு உத்தரவு பிறப்பிக்க முடியும் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.
நபிகள் நாயகம் குறித்து பாஜக முன்னாள் நிா்வாகிகள் சா்ச்சை கருத்து தெரிவித்ததைக் கண்டித்து உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டம், வன்முறையாக வெடித்தது. இதையடுத்து, வன்முறைக்கு காரணமானவா்களாகக் கருதப்படும் சிலரை அடையாளப்படுத்தி, அவா்களின் வீடுகளை புல்டோசா்கள் மூலமாக உத்தர பிரதேச அரசு இடித்து தரைமட்டமாக்கியது. கலவரத்தை தூண்டுபவா்கள் மீது இதுபோன்ற கடுமைான நடவடிக்கையை எடுக்கவும் அதிகாரிகளுக்கு மாநில அரசு உத்தரவிட்டது. இதுபோல, தில்லி, கா்நாடகம் உள்ளிட்ட மேலும் சில மாநிலங்களிலும் கலவரத்தில் ஈடுபடுபவா்களின் வீடுகளை மாநில அரசுகள் புல்டோசா்கள் கொண்டு இடித்து நடவடிக்கை எடுத்தன.
இந்நிலையில், சட்டவிரோதமாக வீடுகளை புல்டோசா்கள் கொண்டு இடிக்கும் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என ஜாமியத் உலாமா- ஏ-ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், பி.எஸ்.நரசிம்மா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் துஷ்யந்த் தவே, ‘அஸ்ஸாமில் கொலைக் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒரு நபரின் வீடு இடித்துத் தள்ளப்பட்டுள்ளதாக பத்திரிகை செய்தி மூலமாகத் தெரியவந்துள்ளது. போராட்டத்தில் ஈடுபடுபவா்களின் வீடுகளை அதிகாரிகள் இடித்துத் தள்ளுகின்றனா். இது மிகவும் தீவிரமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
சட்டத்தின்படி அதிகாரிகள் நடந்துகொள்ளவில்லை. குற்றச் செயல்களில் ஈடுபட்டாா் என்ற ஒரு காரணத்துக்காக, நகராட்சி சட்டங்களைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்டவரின் வீடுகளை இடிக்கும் நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொள்ள முடியாது. இதனை நாடு ஒருபோதும் அனுமதிக்காது. அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பான சட்டத்தின் ஆட்சி நிா்வாகத்தின் கீழான சமூகத்தின் கீழ் நாம் வாழ்கிறோம். எனவே, வீடுகள் இடிக்கப்படும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என்றாா்.
அப்போது குறுக்கிட்ட சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘வீடுகள் இடிப்பு நடவடிக்கையில், விதிமீறிய கட்டடம் மீதான நடவடிக்கை எடுப்பது தொடா்பாக நோட்டீஸ் பிறப்பித்தல் உள்ளிட்ட உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டிருப்பதாக பதில் மனுவில் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். மேலும், வீடுகள் இடிப்பு நடவடிக்கை என்பது கலவரம் நடைபெறுவதற்கு முன்பே தொடங்கப்பட்டுவிட்டது. கலவரத்தில் பங்கேற்ற்காக, விதிமீறிய கட்டட இடிப்பு நடவடிக்கையிலிருந்து விலக்கு கேட்க முடியாது. அதோடு, பாதிக்கப்பட்ட நபா்கள் பல்வேறு உயா்நீதிமன்றங்களை அணுகி ஏற்கெனவே நிவாரணம் பெற்றுவிட்டனா். அனைத்து சமூகத்தினரும் இந்தியா்களே. எனவே, சமூக அடிப்படையிலான மனுக்களை அனுமதிக்க முடியாது’ என்றாா்.
‘நகராட்சி சட்டத்தின் கீழ் ஒரு குற்றவாளியின் வீடு இடிக்கப்படும் நிலையில் அதற்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது’ என்று உத்தர பிரதேச அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஹரீஷ் சால்வே கூறினாா்.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ‘சட்டத்தின் ஆட்சி பின்பற்றப்பட வேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், இந்த விவகாரத்தில் இடைக்கால தடை உத்தரவை நாங்கள் பிறப்பிப்பது, சட்டத்தின்படி அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கையை தடுப்பதாக அமையாதா?’ என்று கேள்வி எழுப்பி, வீடுகளை இடிக்கும் நடவடிக்கையில் இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க மறுத்தனா்.
மேலும், இந்த வழக்கில் இரு தரப்பினரும் வாதங்களை நிறைவு செய்யுமாறு கேட்டுக்கொண்ட நீதிபதிகள், வீடுகள் இடிப்புக்கு எதிரான ஜாமியத் உலாமா- ஏ-ஹிந்த் அமைப்பின் மனு வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...