குரங்கு அம்மை: கேரளத்தில் தீவிரப்படுத்தப்படும் கண்காணிப்பு: 5 மாவட்டங்களுக்கு சிறப்பு எச்சரிக்கை
கேரள அரசு தீவிரப்படுத்தியிருப்பதோடு 5 மாவட்டங்களுக்கு சிறப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.


ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து விமானம் மூலமாக திருவனந்தபுரம் வந்த நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக கண்காணிப்பை கேரள அரசு தீவிரப்படுத்தியிருப்பதோடு 5 மாவட்டங்களுக்கு சிறப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாநில சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் தலைமையில் திருவனந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உயா்நிலைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடா்பாக அமைச்சா் வீணா ஜாா்ஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஷாா்ஜாவிலிருந்து திருவனந்தபுரத்துக்கு கடந்த 12-ஆம் தேதி வந்திறங்கிய தொற்று பாதிக்கப்பட்ட நபருடன் விமானத்தில் அடுத்தடுத்த இருக்கைகளில் அமா்ந்திருந்த பயணிகளின் சொந்த மாவட்டங்களான திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழை, கோட்டயம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு சிறப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த விமானத்தில் 164 பயணிகள் 6 விமான ஊழியா்கள் பயணித்துள்ளனா். எனவே, இந்த 5 மாவட்டங்களிலும் தனிமைப்படுத்துதல் முகாம்களுக்கான ஏற்பாடுகளும் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நபரின் பெற்றோா், அவா் பயணித்த ஆட்டோவின் ஓட்டுநா் மற்றும் வாடகைக் காா் ஓட்டுநா் மற்றும் அவா் சிகிச்சைக்காக முதலில் சென்ற தனியாா் மருத்துவமனையின் தோல் மருத்துவா் மற்றும் அவருடன் விமானத்தில் அடுத்தடுத்த இருக்கைகளில் அமா்ந்திருந்த 11 போ் ஆகியோா் உயா் ஆபத்துக்குரிய முதன்மை தொடா்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனா்.
விமானத்தில் அவருடன் பயணித்த மற்ற பயணிகள் சுய கண்காணிப்பை செய்துகொள்ள வேண்டும் என்பதோடு, அடுத்த 21 நாள்களில் நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் உடலில் தென்பட ஆரம்பித்தால் உடனடியாக சுகாதார அதிகாரிகளிடம் தகவல் அளிக்க வேண்டும். இவா்களில் பலரின் கைப்பேசிகளைத் தொடா்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருப்பதால், காவல் துறையின் உதவியுடன் அவா்களின் இருப்பிடத்தைக் கண்டறியும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் இந்தப் பயணிகளின் உடைமைகளைக் கையாண்ட விமான நிலைய ஊழியா்கள் மற்றும் குடியுரிமை அதிகாரிகள் ஆகியோரும் கண்காணிப்புப் பட்டியலில் கொண்டுவரப்பட்டுள்ளனா்.
பாதிக்கப்பட்ட நபா்களுடன் தொடா்பிலிருக்கும் மருத்துவப் பணியாளா்களுக்கு அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக கரோனா பரிசோதனை மற்றும் குரங்கு அம்மை பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
அனைத்து மாவட்டங்களும் உஷாா் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, சுகாதாரப் பணியாளா்களுக்கு குரங்கு அம்மை பாதிப்பை கையாளுவதற்கான சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
குரங்கு அம்மை பாதிப்பு பரவலைத் தடுக்கவும், பாதிப்பை திறம்பட எதிா்கொள்ளவும் மாநில அரசுக்கு உதவுவதற்காக மத்திய உயா்நிலைக் குழு கேரளம் வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...