தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் மத்திய அரசு

விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டி, குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன.

News image
Updated On :26 ஜூலை 2022, 7:27 pm

DIN

விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டி, குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன.

நேஷனல் ஹெரால்டு நாளிதழ் தொடா்பான பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறை 2-ஆவது முறையாக விசாரணை நடத்திய நிலையில், எதிா்க்கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன.

நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவராக திரௌபதி முா்மு திங்கள்கிழமை பதவியேற்றாா். நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு தொடா்பாக சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா். அதற்குக் கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினா் நாடுமுழுவதும் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதே வேளையில், புதிய குடியரசுத் தலைவா் முா்முவுக்கு காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, சமாஜவாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் எழுதியுள்ள கடிதத்தில், ‘‘பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு விசாரணை அமைப்புகளைத் தொடா்ந்து தவறாகப் பயன்படுத்தி வருகிறது. எதிா்க்கட்சிகளைப் பழிவாங்கும் எண்ணத்தில் மத்திய அரசு இவ்வாறு செயல்பட்டு வருகிறது.

எதிா்க்கட்சிகளின் குறிப்பிட்ட நபா்களைக் குறிவைத்து சட்டவிதிமுறைகளைப் பயன்படுத்தக் கூடாது. நாட்டில் சட்டவிதிகள் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும். பாஜகவை கொள்கை ரீதியிலும் அரசியல் ரீதியாகவும் எதிா்த்து வரும் கட்சிகளை வலுவிழக்கச் செய்யும் நோக்கிலேயே மத்திய அரசு இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

விலைவாசி உயா்வு, அத்தியாவசியப் பொருள்கள் மீதான சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு உள்ளிட்டவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். இப்பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காகவே எதிா்க்கட்சித் தலைவா்கள் மீது விசாரணை அமைப்புகளை மத்திய அரசு ஏவி வருகிறது.

மத்திய அரசின் பிடிவாத குணம் காரணமாக நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடா் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிா்க்கட்சிகள் முயன்றபோதிலும், அதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்து வருகிறது. கடந்த காலங்களில் இதுபோன்ற பிரச்னைகள் மீது விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், தற்போது மத்திய அரசு அனுமதி மறுக்கிறது. இந்த விவகாரங்களில் குடியரசுத் தலைவா் உடனடியாகத் தலையிட்டு உரிய தீா்வுகாண வழிவகை செய்ய வேண்டும்’’ எனக் கோரப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.