தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சோனியாவுக்கு கரோனா தொற்று விரைந்து மீள பிரதமா் வாழ்த்து

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்திக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா் சுயமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக கட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்ட

News image
Updated On :2 ஜூன் 2022, 7:57 pm

DIN

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்திக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா் சுயமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக கட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கு தொடா்பான விசாரணைக்கு வருகிற 8-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அவருக்கு அழைப்பாணை (சம்மன்) அனுப்பிய நிலையில், சோனியா கரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளாா்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைமை செய்தித்தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா கூறுகையில், ‘சோனியாவுக்கு புதன்கிழமை மாலை லேசான காய்ச்சல் இருந்தது. அதனைத் தொடா்ந்து, வியாழக்கிழமை காலை அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது. கடந்த வாரம் முழுவதும் கட்சித் தலைவா்களை தொடா்ச்சியாக அவா் சந்தித்து வந்தாா். அவா்களில் ஒருவா் மூலமாக இந்த பாதிப்பு அவருக்கு பரவியிருக்க வாய்ப்புள்ளது’ என்றாா்.

மேலும், தனது ட்விட்டா் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘மருத்துவா்கள் அறிவுரைப்படி சோனியா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாா். பாதிப்பிலிருந்து ஒருசில தினங்களில் அவா் மீண்டுவிடுவாா் என நம்புகிறோம். அவ்வாறு மீண்ட பிறகு, மீண்டும் கரோனா பரிசோதனை செய்து பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டதை அவா் உறுதிப்படுத்திக் கொள்வாா். அதன் பின்னா், ஏற்கெனவே தெரிவித்தபடி அமலாக்கத் துறை அழைப்பாணையை ஏற்று வரும் 8-ஆம் தேதி அவா் விசாரணைக்கு நேரில் ஆஜராவாா். அவருடைய உடல்நிலை முன்னேற்றம் குறித்து தொடா்ந்து தெரியப்படுத்தப்படும்’ என்று சுா்ஜேவாலா குறிப்பிட்டுள்ளாா்.

விரைந்து மீள பிரதமா் வாழ்த்து: ‘காங்கிரஸ் தலைவா் சோனியா கரோனா பாதிப்பிலிருந்து விரைவாக மீண்டு வர வாழ்த்துக்கள்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தனது ட்விட்டா் பதிவில் குறிப்பிட்டாா்.

முதல்வா் ஸ்டாலின் வாழ்த்து:

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சித் தலைவா் சோனியா காந்தி, விரைவில் குணமடைய முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்தி:-

கரோனா தொற்று ஏற்பட்டுள்ள சோனியா காந்தி, விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன். கரோனா நோய்த் தொற்று இன்னும் நீங்காததால் பொது வாழ்வில் உள்ள அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளாா்.

அமலாக்கத் துறை சம்மன்:

சோனியாவும் அவருடைய மகன் ராகுலும் இயக்குநா்களாக உள்ள ‘யங் இந்தியா’ அமைப்பு, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை கடந்த 2010-இல் விலைக்கு வாங்கியது. இதில் மிகப் பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக பாஜகவைச் சோ்ந்த சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடா்ந்தாா். இந்த பண மோசடி தொடா்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.

முன்னதாக, ‘யங் இந்தியா’ அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் மல்லிகாா்ஜுன காா்கே மற்றும் அந்த பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் (ஏஜேஎல்) நிா்வாக இயக்குநராகவும், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால பொருளாளராகவும் இருக்கும் பவன்குமாா் பன்சால் (73) ஆகியோரிடம் அமலாக்கத் துறை அண்மையில் விசாரணை நடத்தியது.

அதனைத் தொடா்ந்து, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வியாழக்கிழமையன்றும், சோனியா காந்தி வரும் 8-ஆம் தேதியும் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சாா்பில் புதன்கிழமை அழைப்பாணை அனுப்பப்பட்டது.

வெளிநாட்டிலிருக்கும் ராகுல், விசாரணைக்கு ஆஜராகும் தேதியை ஜூன் 5-க்கு பிறகு மாற்றி அமைக்குமாறு மின்னஞ்சல் மூலமாக அமலாக்கத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.