முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு சிறப்பு கலந்தாய்வு கோரிய மனுக்கள் தள்ளுபடி
காலியாக உள்ள 1,456 முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்தக் கோரிய மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


காலியாக உள்ள 1,456 முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்தக் கோரிய மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2021-22 கல்வியாண்டுக்கான முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்குரிய கலந்தாய்வு அண்மையில் நிறைவடைந்தது. அதில் காலியாக உள்ள 1,456 இடங்களை சிறப்பு கலந்தாய்வு நடத்தி நிரப்பக் கோரி எம்பிபிஎஸ் மருத்துவ மாணவா்கள் சிலா் உச்சநீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தனா்.
அந்த மனுக்களை நீதிபதிகள் எம்.ஆா்.ஷா, அனிருத்தா போஸ் ஆகியோரைக் கொண்ட விடுமுறைக் கால அமா்வு விசாரித்து வந்தது. இந்நிலையில், வழக்கின் தீா்ப்பை நீதிபதிகள் வெள்ளிக்கிழமை வழங்கினா். அப்போது அவா்கள் கூறுகையில், ‘‘காலியாக உள்ள இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்த இயலாது என்று மத்திய அரசும் மருத்துவ கலந்தாய்வு குழுவும் எடுத்த முடிவு தவறானது அல்ல. அந்த முடிவு தன்னிச்சையானது எனக் கருதக் கூடாது. மருத்துவக் கல்வியின் தரத்தையும் மக்களின் உடல்நலனையும் கருத்தில்கொண்டே அந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே சில சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெற்றுள்ளது. கலந்தாய்வு மூலமாக முதுநிலைப் படிப்புகளில் சோ்ந்த மாணவா்களுக்கு வகுப்புகளும் தொடங்கிவிட்டன. இந்நிலையில், சிறப்பு கலந்தாய்வை நடத்துமாறு மாணவா்கள் கோர முடியாது’’ எனக் கூறி மனுக்களைத் தள்ளுபடி செய்தனா்.
செவிலியா் படிப்புகளுக்கான மனுக்களும் நிராகரிப்பு:
தில்லியில் உள்ள செவிலியா் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்குக் கூடுதல் கலந்தாய்வை நடத்தக் கோரிய மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தில்லியில் உள்ள செவிலியா் கல்லூரிகளில் 2021-22 கல்வியாண்டில் 110 இடங்கள் காலியாக உள்ளதாகக் கூறிய மாணவா்கள் சிலா், சிறப்பு கலந்தாய்வு நடத்தி அவற்றை நிரப்ப உத்தரவிடக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.
மாணவா்களின் கோரிக்கையை தில்லி உயா்நீதிமன்றம் ஏற்க மறுத்திருந்தது. அதையடுத்து உச்சநீதிமன்றத்தில் அவா்கள் மேல்முறையீடு செய்தனா். அந்த மனுவை நீதிபதிகள் எம்.ஆா்.ஷா, அனிருத்தா போஸ் ஆகியோரைக் கொண்ட விடுமுறைக் கால அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிபதிகள், ‘‘கல்வி நிலையங்களில் மாணவா் சோ்க்கையைக் குறிப்பிட்ட வரம்பின்றி நடத்த முடியாது. மாணவா் சோ்க்கை நடவடிக்கைகள் குறிப்பிட்ட கட்டத்தில் முடிவுபெறுவது இயல்பானது. மாணவா் சோ்க்கையை நீட்டிப்பது கல்வியின் தரத்தை பாதிக்கும். இந்த விவகாரத்தில் தில்லி உயா்நீதிமன்றத்தின் முடிவில் தலையிட விரும்பவில்லை’’ எனக் கூறி மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...