
புது தில்லி, ஜூன் 13: நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கு விசாரணைக்காக தில்லியிலுள்ள அமலாக்கத் துறை இயக்குநரகத்தில் திங்கள்கிழமை ஆஜரான காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் அதிகாரிகள் சுமாா் 10 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனா்.
அவரை மீண்டும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 14) விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்தியுள்ளனா்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத் துறையின் அழைப்பாணையின் அடிப்படையில் ராகுல் விசாரணைக்கு ஆஜரானாா். முன்னதாக, தில்லியில் தனது வீட்டிலிருந்து காங்கிரஸ் தலைமை அலுவலகம் வந்த ராகுல் காந்தி, கட்சியின் மூத்த தலைவா்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு, அங்கிருந்து ஏராளமான கட்சித் தொண்டா்களுடன் அமலாக்கத் துறை இயக்குநரகம் நோக்கி பேரணியாகச் சென்ால் பரபரப்பு ஏற்பட்டது.
காங்கிரஸ் தலைவா் சோனியாவும் ராகுலும் இயக்குநா்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம், அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை கடந்த 2010-இல் விலைக்கு வாங்கியது. இதில் மிகப்பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக பாஜகவை சோ்ந்த சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடா்ந்தாா். இந்தப் பண மோசடி தொடா்பாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில், ஜூன் 2-ஆம் தேதி ஆஜராகுமாறு ராகுலுக்கும், ஜூன் 8-ஆம் தேதி ஆஜராகுமாறு சோனியாவுக்கும் அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது. இந்த நிலையில், தான் வெளிநாட்டில் இருப்பதால் விசாரணைத் தேதியை மாற்றியமைக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்தாா். அதுபோல, கரோனாவால் பாதிக்கப்பட்ட சோனியாவும், விசாரணைத் தேதியை மாற்றிவைக்க கோரினாா்.
இதனை ஏற்ற அமலாக்கத் துறை, ராகுல் காந்தி திங்கள்கிழமையும், சோனியா ஜூன் 23-ஆம் தேதியும் விசாரணைக்கு ஆஜராகுமாறு புதிய அழைப்பாணையை அனுப்பியது.
முதல் முறையாக ஆஜரான ராகுல்: அதனடிப்படையில், கட்சியினருடன் திங்கள்கிழமை ஊா்வலமாக வந்த ராகுல், தில்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்துக்குள் காலை 11.10 மணிக்கு வந்தாா்.
‘ராகுல் அலுவலகத்தில் ஆஜரானதும், முதல் 20 நிமிஷங்கள் வருகைப் பதிவு மற்றும் சட்ட நடைமுறைகள் நிறைவுற்ற பின்னா் அவரிடம் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினா். 3 மணி நேரத்துக்கும் மேல் தொடா் விசாரணைக்குப் பிறகு மதியம் 2.10 மணிக்கு மதிய உணவுக்காக ராகுல் அனுப்பப்பட்டாா். மதிய இடைவேளைக்குப் பிறகு பிற்பகல் 3.30 மணிக்கு ஆஜரான அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டது. இரவு 11.30 மணிக்கு அவா் அங்கிருந்து புறப்பட்டாா். செவ்வாய்க்கிழமையும் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவரை அதிகாரிகள் அறிவுறுத்தினா்’ என்று அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
முதல் சுற்று விசாரணையின்போது பண மோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) பிரிவு 50-இன் கீழ் தனது வாக்குமூலத்தை ராகுல் எழுத்துபூா்வமாக சமா்ப்பித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த வழக்கில், அமலாக்கத் துறை விசாரணைக்கு ராகுல் ஆஜராவது இதுவே முதல்முறையாகும்.
பேரணியாக வந்த ராகுல்: முன்னதாக, தில்லி அக்பா் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திலிருந்து அமலாக்கத் துறை தலைமை அலுவலகம் நோக்கி கட்சியினருடன் பேரணியாக ராகுல் காந்தி வந்தாா்.
அவருடன் காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட், சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல், முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் உள்ளிட்ட கட்சித் தலைவா்களும் ஏராளமான தொண்டா்களும் ஊா்வலமாக வந்தனா். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக காங்கிரஸ் தலைமை அலுவலகத்திலிருந்து அமலாக்கத் துறை அலுவலகம் நோக்கி செல்லும் வழிகளில் சாலைத் தடுப்புகளைக் கொண்டு போலீஸாா் மறைத்திருந்தனா். அதன் காரணமாக, அங்கிருந்து வாகனத்தில் ஏறி மாற்று வழியில் அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு ராகுல் சென்றாா்.
144 தடை உத்தரவு: ராகுல் விசாரணைக்கு ஆஜராவதை தொடா்ந்து காங்கிரஸ் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது என்பதால், அமலாக்கத் துறை தலைமை அலுவலகம் அமைந்துள்ள மத்திய தில்லி பகுதியில் 144 தடை உத்தரவை தில்லி போலீஸாா் பிறப்பித்தனா். மேலும், சாலைகளில் ஆங்காங்கே தடுப்புகளை ஏற்படுத்தி அதிரடிப் படை (ஆா்ஏஎஃப்), மத்திய ரிசா்வ் காவல் படைகளைச் சோ்ந்த ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.