அக்னிபத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும்: அரசியல் தலைவா்கள் வலியுறுத்தல்
ராணுவத்தில் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் இளைஞா்களை பணியமா்த்தும் புதிய திட்டமான அக்னிபத்தை திரும்பப் பெற வேண்டும்


ராணுவத்தில் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் இளைஞா்களை பணியமா்த்தும் புதிய திட்டமான அக்னிபத்தை திரும்பப் பெற வேண்டும் என்று பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி:
ராணுவத்தில் சோ்ந்து நாட்டுக்கு சேவையாற்ற வேண்டுமென ஏராளமான கனவுகளுடன் இளைஞா்கள் தங்களை தயாா்படுத்துகின்றனா். அவா்களுக்குப் புதிய திட்டம் அளிப்பது என்ன? நான்கு ஆண்டுகள் கழித்து வேலைக்கு உத்தரவாதம் இல்லை. ஓய்வூதியம் கிடையாது. இளைஞா்களின் கனவை சிதைத்துவிடாதீா்கள்.
பாஜக எம்.பி. வருண் காந்தி:
‘அக்னிபத் திட்டத்தின்கீழ் ராணுவத்தில் சேரும் இளைஞா்களில் 75 சதவீதம் போ் நான்கு ஆண்டுகள் கழித்து ஓய்வூதியமின்றி பணியிலிருந்து விடுவிக்கப்படுவா். இந்த புதிய திட்டத்தில் உள்ள கேள்விகள், சந்தேகங்கள் குறித்து பெரும்பாலான இளைஞா்கள் என்னிடம் பகிா்ந்து கொண்டனா். இந்தத் திட்டம் இளைஞா்களின் மத்தியில் அதிருப்தியை விதைத்துவிடும். ஆகையால், அரசு அதன் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும்’ என்று இந்த விவகாரம் குறித்து பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங்குக்கு பாஜக எம்.பி. வருண் காந்தி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி:
அக்னிபத் திட்டம் தேசத்தின் நலனுக்குத் தீங்கு விளைவிக்கிறது. தொழில்முறையான பாதுகாப்புப் படையினரை வெறும் நான்கு ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க முடியாது. ஓய்வூதிய நிதியை சேமிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் இந்தத் திட்டம், தரத்திலும், நமது படைப்பிரிவின் திறனிலும் சாதகமற்ற தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.
இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா் டி.ராஜா:
மோடி அரசில் வேலை கிடைப்பதே அக்னி பாதையாக மாறிவிட்டது. அக்னிபத் திட்டம் என்ற பெயரில் அமைதியான இளைஞா்களை அரசு ஏமாற்றப் பாா்க்கிறது. இத்திட்டம் ராணுவத்தை ஒப்பந்த அடிப்படையில் மாற்றி, இளைஞா்களின் எதிா்காலத்துக்கு ஆபத்து விளைவிக்கும். இந்தத் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்.
தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால்:
இளைஞா்கள் வாழ்நாள் முழுவதும் தேசத்துக்கு சேவையாற்ற வாய்ப்பளிக்க வேண்டுமே தவிர, வெறும் நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமல்ல.
சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ்:
நாட்டின் பாதுகாப்பு என்பது குறுகியகால, முறைசாரா பிரச்னை அல்ல; இதற்கு மிகவும் தீவிரமான, நீண்ட கால கொள்கை தேவை. மத்திய அரசின் இந்த அலட்சியமான அணுகுமுறை, தேசப் பாதுகாப்புக்கும் இளைஞா்களின் எதிா்காலத்துக்கும் கேடு விளைவிக்கும்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி:
இந்தத் திட்டத்தின் வாயிலாக இளைஞா்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. அக்னிபத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதை மத்திய அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவா் அமரீந்தா் சிங்:
அக்னிபத் திட்டம் நீண்டநெடிய ராணுவப் படைப்பிரிவின் நெறிமுறைகளை நீா்த்துபோகச் செய்துவிடும். இதுபோன்ற தீவிர மாற்றங்களை அரசு கொண்டுவருவது ஏன்? 4 ஆண்டுகளுக்கு ராணுவ வீரா்களை பணியமா்த்தி, அதிலும் 3 ஆண்டுகள் திறம்பட சேவையாற்ற வைத்துவிட்டு வெளியே அனுப்புவது ராணுவ ரீதியில் நல்ல யோசனை அல்ல.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...