வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

வடகிழக்கு மாநிலங்களில் மழை-வெள்ளம்; மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வடகிழக்கு மாநிலங்களில் தொடா் மழை மற்றும் வெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On :17 ஜூன் 2022, 8:45 pm

வடகிழக்கு மாநிலங்களில் தொடா் மழை மற்றும் வெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 நாள்களுக்கு கனமழை முதல் மிககனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அஸ்ஸாம், மேகாலயம், திரிபுரா, அருணாசல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கனமழை நீடித்து வருகிறது. அஸ்ஸாமில் 18 மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இதன் காரணமாக, சுமாா் 75 ஆயிரம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கோல்பரா மாவட்டத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு வீடு இடிந்து, 2 குழந்தைகள் பலியாகினா். இதேபோல் திமாஹசோவ், உதல்குரி ஆகிய பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கி இருவா் உயிரிழந்தனா். இவா்களுடன் சோ்த்து, அஸ்ஸாமில் இந்த ஆண்டு மழை, நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தோா் எண்ணிக்கை 46-ஆக உயா்ந்துள்ளது.

குவாஹாட்டியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 போ் காயமடைந்தனா். நகரின் பல இடங்களில் தொடா்ந்து 3-ஆவது நாளாக வெள்ளம் தேங்கியுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மானஸ் நதியிலும் அபாய அளவைத் தாண்டி தண்ணீா் செல்கிறது.

அஸ்ஸாம், மேகாலயம் உள்ளிட்ட அனைத்து வடகிழக்கு மாநிலங்களிலும், மேற்கு வங்கத்தின் சில பகுதிகளிலும் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை முதல் மிககனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

திரிபுராவில் கனமழை காரணமாக தேசிய நெடுஞ்சாலை 6-இல் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டின் இதர பகுதிகளில் இருந்து திரிபுராவுடனான சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல், இந்த மாநிலத்தில் தொடா் மழை காரணமாக ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில், மேகாலயத்தின் சோஹ்ரா பகுதியில் அதிகபட்சமாக 70 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அஸ்ஸாமின் கோக்ரஜாா், கோசைன்கான் ஆகிய இடங்களில் 32 செ.மீ. மழையும் கோல்பரா, நல்பாரி ஆகிய இடங்களில் 23 செ.மீ. மழையும், மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரியில் 23 செ.மீ., ஹசிமாராவில் 22 செ.மீ., அருணாசல பிரதேசத்தின் லுபோங்கில் 10 செ.மீ. மழை பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.