மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே ராஜிநாமா?

மகாராஷ்டிரம் மாநில அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்றும் வரும் நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜிநாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே ராஜிநாமா?
Published on
Updated on
2 min read


மகாராஷ்டிரம் மாநில அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்றும் வரும் நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜிநாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மகாராஷ்டிரத்தில் சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கட்சிகளைக் கொண்ட மகா விகாஸ் அகாடி கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அண்மையில் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்றது. அதில் 6 இடங்களில் பாஜக 3 இடங்களையும், சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தலா ஓரிடத்தையும் கைப்பற்றின. பாஜகவுக்கு இரு இடங்கள் மட்டுமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிவசேனை வேட்பாளரைத் தோற்கடித்து பாஜக கூடுதலாக ஓரிடத்தைக் கைப்பற்றியது.

அதேபோல், மாநில சட்டமேலவைத் தேர்தலிலும் பாஜக 4 இடத்தைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூடுதலாக ஓரிடத்தைக் கைப்பற்றியது. அதனால், மகா விகாஸ் அகாடி கூட்டணிக்குள் ஒத்துழைப்பு காணப்படவில்லை எனப் பலரும் குற்றஞ்சாட்டினர். தேர்தலின்போது சிவசேனையை சேர்ந்த சில எம்எல்ஏ-க்கள் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும் புகார் எழுந்தது.

இந்நிலையில், சிவசேனையை சேர்ந்த மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவாளர்களான சுமார் 15 எம்எல்ஏ-க்களுடன் குஜராத்தின் சூரத்தில் முகாமிட்டுள்ளார். அவர்களைத் தற்போது தொடர்புகொள்ள முடியாத நிலை உருவானது. இதையடுத்து சிவசேனை கூட்டணியின் பலம் குறைந்துள்ளதால் அரசியல் பரபரப்பு சூடுபிடிக்கத் தொடங்கியது. 

இது தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே எந்த விளக்கத்தையும் இதுவரை அளிக்காத நிலையில், அவர் பாஜகவில் இணைந்து ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுப்பாரா என்ற கேள்வியும் எழுந்தது. 

பாஜக ஆட்சியமைப்பதற்காக ஏக்நாத் ஷிண்டே ஆதரவு தர முன்வந்தால், அதுகுறித்து நிச்சயமாகப் பரிசீலிக்கப்படும் எனவும் பாஜக தரப்பு தெரிவித்திருந்தது. 

இதனிடையே புதன்கிழமை காலை அசாம் மாநிலம் கவுகாத்திக்கு சென்றுள்ள ஏக்நாத் ஷிண்டே, தன்னையும் சேர்த்து 33 கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் 7 சுயேச்சை எம்எல்ஏக்களுடன் 40 எம்எல்ஏக்கள் தன்னுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மகாராஷ்டிர கூட்டணி அரசை கவிழ்க்கும் முயற்சியில் சிவசேனையின் மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே 40 எம்எல்ஏக்களுடன் பாஜகவில் சேரலாம் என்ற ஊகங்கள் பரவி வரும் நிலையில் அமைச்சரவை கூட்டத்துக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்தார். 

அமைச்சரவைக் கூட்டம் பிற்பகல் 1 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. உடல்நலக் குறைவு காரணமாக முதல்வர் உத்தவ் தாக்கரே காணொலி மூலம் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜிநாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின் ராஜிநாமா குறித்து உத்தவ் தாக்கரே அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சட்டப்பேரவையில் மொத்தம் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 288 என்ற நிலையில், சிவசேனை -56  தேசியவாத காங்கிரஸ் -53, காங்கிரஸ் -44, பாஜக - 106 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ளனர். 

'மகா விகாஸ் அகாடி' கூட்டணியில் 169 எம்எல்ஏக்களும் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 113 எம்எல்ஏக்களும், 5 சுயேச்சைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com