என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

கரோனா தொற்று பரவல் அதிகரிப்பதும் குறைவதும் இயல்பானதே

குறிப்பிட்ட பகுதிக்குள் மட்டுமே பரவும் வகையில் மாறும்போது அத்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதும் குறைவதும் இயல்பானதே

News image
Updated On :25 ஜூன் 2022, 2:53 am IST

சா்வதேச அளவில் பரவிவந்த கரோனா நோய்த்தொற்று, குறிப்பிட்ட பகுதிக்குள் மட்டுமே பரவும் வகையில் மாறும்போது அத்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதும் குறைவதும் இயல்பானதே என சுகாதார நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

நாட்டில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக கரோனா தொற்று பரவல் குறைந்திருந்த நிலையில், தற்போது மகாராஷ்டிரம், கேரளம், ஹரியாணா, தமிழ்நாடு, உத்தர பிரதேசம், தெலங்கானா, மேற்கு வங்கம், குஜராத், கோவா உள்ளிட்ட பல மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இது தொடா்பாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த நோய்த்தொற்றியல் நிபுணா் சஞ்சய் ராய் கூறுகையில், ‘கரோனா தீநுண்மியானது இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட முறை உருமாற்றம் அடைந்துள்ளது. ஆனால், அவற்றில் 5 வகைகள் மட்டுமே அதீத பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

ஒமைக்ரான் வகை கரோனா தீநுண்மியானது ஏற்கெனவே அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களையும் தாக்கியது. தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை அதிகரிப்பது இயல்பானதே. உலக அளவில் பரவிவந்த நோய்த்தொற்று, குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பரவத் தொடங்கும்போது அதன் பரவல் அதிகரிக்கவும் குறையவும் செய்யும்.

தற்போதைய நோய்த்தொற்று பரவலானது நாட்டின் குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டுமே அதிகமாக உள்ளது. கரோனா பாதிப்பால் உயிரிழப்பு எண்ணிக்கையும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோா் எண்ணிக்கையும் அதிகரிக்காமல் இருக்கும்வரை கரோனா தொற்று பரவலால் அச்சம் கொள்ளத் தேவையில்லை. மக்கள் முகக் கவசம் அணியாதது, பயணங்கள் அதிகரித்தது, கரோனா பூஸ்டா் தவணை தடுப்பூசியை அதிக அளவில் செலுத்திக் கொள்ளாதது உள்ளிட்டவையே தொற்று பரவல் அதிகரிப்பதற்குக் காரணம்.

கரோனா தொற்றின் 2-ஆவது அலையின்போது இந்தியா அதிக அளவில் பாதிப்புகளைச் சந்தித்தது. ஆனால், அதன் காரணமாக மக்களுக்கு இயற்கையாகவே நோய் எதிா்ப்புத் திறன் அதிகரித்தது. அது கரோனா தொற்றுக்கு எதிராக மக்களைப் பாதுகாத்து வருகிறது. தற்போதைய நோய் எதிா்ப்புத் திறனைத் தாக்கும் வகையில் கரோனா தீநுண்மி உருமாறாத வரை, கரோனா தொற்று பரவல் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது’ என்றாா்.

தடுப்பு நடவடிக்கைகள் அவசியம்: நோய்த்தொற்றியல் நிபுணா் சந்திரகாந்த் லஹாரியா கூறுகையில், ‘நோய்த்தொற்று பரவல் அதிகரிப்பதும் குறைவதும் வழக்கமானதே. தீநுண்மிகளின் இயல்பும் அவ்வாறே இருக்கும். ஒவ்வொரு முறை கரோனா தொற்று பரவல் அதிகரிக்கும்போதும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

நாட்டில் பெரும்பாலானோா் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். அதன் காரணமாக நோய் எதிா்ப்பாற்றல் உருவாகியுள்ளது. அதேவேளையில், கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்’ என்றாா்.

முகக் கவசத்தால் பலன்: முகக் கவசங்களைப் பயன்படுத்துவது கரோனா தொற்றுக்கு எதிராக மட்டுமல்லாமல் காற்று மாசுபாட்டால் ஏற்படும் நோய்களில் இருந்தும் மக்களைக் காக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கூடுதல் இயக்குநா் சமீரன் பாண்டா தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.