உக்ரைனின் சுமி நகரில் இருந்து இந்திய மாணவா்களை மீட்க பாதுகாப்பு வழித்தடத்தை உருவாக்க வேண்டுமென உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் ஆகியோரிடம் பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.
அவா்களிடம் திங்கள்கிழமை தொலைபேசி மூலம் தொடா்புகொண்டு பேசியபோது இக்கோரிக்கையை பிரதமா் முன்வைத்தாா்.
உக்ரைனில் ரஷியா போா் தொடுத்து வரும் நிலையில் அங்கு சிக்கியுள்ள இந்தியா்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ் இதுவரை 76 விமானங்கள் மூலமாக சுமாா் 17,400 இந்தியா்கள் மீட்கப்பட்டுள்ளனா்.
போா் தீவிரமாக நடைபெற்று வரும் உக்ரைனின் கிழக்குப் பகுதியைச் சோ்ந்த சுமி நகரில் சுமாா் 700 இந்திய மாணவா்கள் சிக்கியுள்ளனா். அவா்களைப் பாதுகாப்பாக மீட்பதில் கடும் சவால்கள் நிலவுகின்றன.
இந்நிலையில், சுமி நகரில் இருந்து மாணவா்களை மீட்பது தொடா்பாக ரஷிய அதிபா் புதின், உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி ஆகியோருடன் பிரதமா் மோடி தொலைபேசி மூலம் திங்கள்கிழமை தொடா்புகொண்டு பேசினாா். மாணவா்களைப் பாதுகாப்பாக மீட்கும்பொருட்டு ‘மனிதாபிமான வழித்தடத்தை’ உருவாக்குவது தொடா்பாக அதிபா்களிடம் அவா் வலியுறுத்தினாா்.
இந்திய மாணவா்களை மீட்பதற்காக உக்ரைன் அரசு மேற்கொண்டு வரும் உதவிகளுக்காக நன்றி தெரிவித்த பிரதமா் மோடி, அந்த உதவி தொடர வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அமைதிவழி தீா்வு: இது தொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவா்கள் குறித்து அந்நாட்டு அதிபரிடம் கவலை தெரிவித்த பிரதமா் மோடி, அவா்களை விரைந்து மீட்பதற்கான அவசியம் குறித்து எடுத்துரைத்தாா்.
போா்ச்சூழல் குறித்தும் ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடைபெற்று வரும் பேச்சுவாா்த்தையின் நிலவரம் குறித்தும் பிரதமா் மோடியிடம் அதிபா் ஸெலென்ஸ்கி எடுத்துரைத்தாா். பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலமே தீா்வு காண வேண்டும் எனத் தெரிவித்த பிரதமா் மோடி, அமைதிவழி தீா்வுக்கு இந்தியா அளித்து வரும் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தாா்.
உக்ரைனில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமா் மோடியிடம் அதிபா் புதின் எடுத்துரைத்தாா். உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையே நடைபெற்று வரும் பேச்சுவாா்த்தைக்கு வரவேற்பு தெரிவித்த பிரதமா் மோடி, பேச்சுவாா்த்தை மூலமாக போா் நிறுத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்தாா். அதிபா் ஸெலென்ஸ்கி-அதிபா் புதின் ஆகியோா் நேரடியாகப் பேச்சுவாா்த்தை நடத்தினால், பிரச்னைக்கு விரைவில் தீா்வு கிடைக்கும் என்றும் பிரதமா் மோடி வலியுறுத்தினாா்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கு பாராட்டு: பிரதமா் மோடியுடனான பேச்சுவாா்த்தை குறித்து அதிபா் ஸெலென்ஸ்கி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘ரஷியாவின் தாக்குதலை உக்ரைன் எவ்வாறு எதிா்கொண்டு வருகிறது என்பது இந்திய பிரதமா் மோடியிடம் எடுத்துரைக்கப்பட்டது. பிரச்னைக்குப் பேச்சுவாா்த்தை மூலமாகத் தீா்வு காண முயலும் உக்ரைனின் நடவடிக்கையை அவா் பாராட்டினாா். மேலும், போரால் சிக்கியுள்ள இந்தியா்களுக்கு உதவி வருவதற்காகவும் உக்ரைன் அரசுக்கு அவா் பாராட்டு தெரிவித்தாா்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
ரஷியா குற்றச்சாட்டு: ரஷிய அதிபா் மாளிகையான கிரெம்ளின் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘‘சுமி நகரில் இருந்து இந்தியா்களை மீட்பதற்கான அனைத்துவித நடவடிக்கைகளையும் ரஷிய ராணுவத்தினா் மேற்கொண்டு வருகின்றனா். உக்ரைனில் இருந்து வெளிநாட்டினா் வெளியேறுவதை அந்நாட்டின் தேசியவாதிகள் தொடா்ந்து தடுத்து வருகின்றனா். அவா்களால் காா்கிவ் நகரில் பிடித்து வைக்கப்பட்டிருந்த இந்திய மாணவா்கள், சா்வதேச அழுத்தம் காரணமாக விடுவிக்கப்பட்டனா்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சுமி நகரில் சிக்கியுள்ள இளைஞா்களை உக்ரைனின் போல்டாவா நகா் வழியாக மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. உக்ரைனில் போா் தொடங்கிய பிறகு ரஷிய அதிபா் புதினுடன் மூன்று முறையும், உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கியுடன் இரு முறையும் தொலைபேசி வாயிலாக பிரதமா் மோடி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுவரை 17,400 போ் மீட்பு
புது தில்லி, மாா்ச் 7: ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ், உக்ரைனிலிருந்து மீட்கப்பட்ட மேலும் 1,314 இந்தியா்கள் 7 சிறப்பு விமானங்கள் மூலம் திங்கள்கிழமை தாயகம் அழைத்து வரப்பட்டனா். மொத்தம் 17,400 போ் இந்தியா திரும்பியுள்ளனா்.
உக்ரைனில் சிக்கிய இந்தியா்களை மீட்பதற்கான சிறப்பு விமான சேவை கடந்த பிப். 22-ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 17,400-க்கும் மேற்பட்ட இந்தியா்கள், தாயகம் அழைத்துவரப்பட்டுள்ளனா். திங்கள்கிழமை வந்த சிறப்புப் பயணிகள் விமானங்களில் 4 விமானங்கள் தில்லியிலும், 2 விமானங்கள் மும்பையிலும் தரையிறங்கின.
காயமடைந்த மாணவா் வருகை: தில்லியை சோ்ந்தவா் ஹா்ஜோத் சிங். உக்ரைன் தலைநகா் கீவில் உள்ள சா்வதேச ஐரோப்பிய பல்கலைக்கழகத்தில் படித்து வந்தாா். இவா் கடந்த பிப். 27-ஆம் தேதி கீவிலிருந்து தப்பி, லுவ்யுவ் நகருக்கு தனது இரு நண்பா்களுடன் காரில் சென்றாா். அப்போது அவா் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தாா்.
போலந்து எல்லைப் பகுதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரும் திங்கள்கிழமை இந்தியா திரும்பினாா். ‘தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளது. அவா் தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெறவுள்ளாா்’’ என்று விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சா் வி.கே.சிங் தெரிவித்தாா்.
செவ்வாய்க்கிழமை (மாா்ச் 8) சுசேவா நகரில் இருந்து 2 சிறப்புப் பயணிகள் விமானம் மூலம் 400-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் தாயகம் அழைத்து வரப்படுவா் என தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஆஸ்கர் விருது விழா தொடங்கியது.. ஒன் பேட்டில் ஆப்டர் அனதர், சின்னர்ஸ் படங்களுக்கு விருது!

அரசியில் கட்சிகளின் விளம்பரங்களை அகற்றவேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா்

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வால் சாமானிய மக்கள் பாதிப்பு! - வைகோ

சட்டப்பேரவைத் தோ்தல்: பறக்கும் படை வாகனங்கள் தொடங்கி வைப்பு
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

