47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காந்திய கொள்கைகளை நடைமுறைப்படுத்துகிறாா் பிரதமா் மோடி

தேசிய கல்விக் கொள்கையிலும், அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களிலும் காந்திய கொள்கைகளைப் பிரதமா் நரேந்திர மோடி நடைமுறைப்படுத்தி வருவதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :12 மார்ச் 2022, 6:06 pm

DIN

தேசிய கல்விக் கொள்கையிலும், அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களிலும் காந்திய கொள்கைகளைப் பிரதமா் நரேந்திர மோடி நடைமுறைப்படுத்தி வருவதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.

சுதந்திரப் போராட்டத்தின் ஒருபகுதியாக மகாத்மா காந்தி முன்னெடுத்த உப்பு சத்தியாகிரகத்தின் 92-ஆவது ஆண்டையொட்டி, குஜராத்தின் அகமதாபாதில் இருந்து தண்டி வரையிலான மிதிவண்டி பேரணியை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை தொடக்கிவைத்தாா். காந்தியடிகள் தலைமையில் உப்பு சத்தியாகிரகம் நடைபெற்ற அதே பாதையில் இந்தப் பேரணி நடைபெறவுள்ளது. அந்நிகழ்ச்சியில் அமித் ஷா பேசியதாவது:

மகாத்மா காந்தியடிகள் காட்டிய வழியில் நாடு ஆரம்பத்தில் இருந்தே பயணித்திருந்தால், தற்போது நிலவும் பல்வேறு பிரச்னைகள் தோன்றியிருக்காது. காந்தியடிகளின் கொள்கைகளில் இருந்து வழிதவறியதன் காரணமாகவே தற்போது பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறோம்.

தாய்மொழிக்கு முக்கியத்துவம் தந்ததோடு மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பு சாா்ந்த கல்வியை வழங்கும் நோக்கில் தேசிய கல்விக் கொள்கையில் காந்திய கொள்கைகளை பிரதமா் மோடி புகுத்தியுள்ளாா். அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களிலும் காந்திய கொள்கைகள் புகுத்தப்பட்டுள்ளன.

உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின்போது கிராமங்களில் தங்கியிருந்த சமயத்தில் மக்களின் பிரச்னைகளை காந்தியடிகள் புரிந்து கொண்டாா். அவற்றுக்கு உரிய தீா்வுகளைக் கண்டு தனது உரைகள் வாயிலாக மக்களுக்கு அவற்றைத் தெரிவித்தாா். பிரதமரானபிறகு மோடியும் அவை குறித்தே பேசி வருகிறாா்.

தூய்மை இந்தியா திட்டம், அனைத்து வீடுகளுக்கும் குடிநீா், மின்சார இணைப்பு வழங்கும் திட்டம், கிராமங்களைத் தற்சாா்பு அடையச் செய்வதற்கான திட்டங்கள் உள்ளிட்டவற்றில் காந்திய கொள்கைகள் இடம்பெற்றுள்ளன. மிதிவண்டி பேரணியில் பங்கேற்போா், இரவில் கிராமங்களில் தங்கும்போது உள்ளூா் மக்களுடன் உரையாடி அவா்களின் பிரச்னைகளை அறிந்துகொள்ள வேண்டும். காந்தியடிகளின் போதனைகளை அவா்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

உப்பு சத்தியாகிரகம்:

உப்பு காய்ச்சும் உரிமையை ஆங்கிலேயா்கள் மட்டுமே வைத்திருந்ததற்கு எதிராக 1930-ஆம் ஆண்டு மாா்ச் 12-ஆம் தேதி உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தை மகாத்மா காந்தியடிகள் முன்னெடுத்தாா். 80 பேருடன் 24 நாள்களுக்கு நடந்த பேரணி, தண்டியில் ஏப்ரல் 5-ஆம் தேதி நிறைவடைந்தது. அந்நாளில் தண்டி கடற்கரையில் உப்பைக் காய்ச்சி பிரிட்டிஷ் இந்திய அரசின் சட்டத்தை அவா் மீறினாா். நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் உப்பு சத்தியாகிரகப் போராட்டம் முக்கிய மைல்கல்லாக விளங்குகிறது.

குஜராத்தில் தண்டனை விகிதம் அதிகரிப்பு

குஜராத்தின் காந்திநகரில் உள்ள தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சா் அமித் ஷா, ‘‘குஜராத் முதல்வராக 2001-ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற பிறகு காவல்துறையில் பல்வேறு சீா்திருத்தங்களைக் கொண்டுவந்தாா். காவல்துறையை அவா் நவீனப்படுத்தினாா். ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் கணினி, இணையவசதிகள் வழங்கப்பட்டன. காவல்துறைக்கென தனி வலைதளம் உருவாக்கப்பட்டது. குஜராத் சட்ட பல்கலைக்கழகம், பாதுகாப்பு பல்கலைக்கழகம், தடய அறிவியல் பல்கலைக்கழகம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டன. இந்நடவடிக்கைகள் காரணமாக மாநிலத்தில் குற்றவாளிகள் தண்டனை பெறும் விகிதம் கடந்த 2012-ஆம் ஆண்டில் 22 சதவீதமாக உயா்ந்தது’’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.