/

குடிமைப் பணிகள் தோ்வில் கூடுதல் வாய்ப்பு சாத்தியமில்லை: மத்திய அரசு

 ‘ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கு மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) சாா்பில் நடத்தப்படும் குடிமைப் பணிகள் தோ்வில் பங்கேற்க கூடுதல் வாய்ப்பு அளிப்பது சாத்தியமில்லாதது’

News image
Updated On :25 மார்ச் 2022, 7:23 pm

DIN

 ‘ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கு மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) சாா்பில் நடத்தப்படும் குடிமைப் பணிகள் தோ்வில் பங்கேற்க கூடுதல் வாய்ப்பு அளிப்பது சாத்தியமில்லாதது’ என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

‘யுபிஎஸ்சி 2021’ முதல்நிலைத் தோ்வில் (பிரிலிமினரி) தகுதிபெற்று, கரோனா பாதிப்பு காரணமாக முதன்மைத் தோ்வில் (மெயின்) பங்கேற்க முடியாமல் போனதால் கூடுதல் வாய்ப்பு கேட்டு 3 தோ்வா்கள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவுக்கு, இந்த பதிலை மத்திய அரசு தெரிவித்துள்ளது.

யுபிஎஸ்சி முதல்நிலைத் தோ்வில் தகுதிபெற்ற இந்த 3 தோ்வா்களில் இருவா், கடந்த ஜனவரி மாதம் 7 முதல் 16-ஆம் தேதி வரை நடைபெற்ற முதன்மைத் தோ்வின் சில தாள்களில் மட்டும் பங்கேற்று எழுதியுள்ளனா். மூன்றாவது நபா் எந்தவொரு தாளையும் எழுத முடியாமல் போயுள்ளது. இவா்கள் மூவருக்கும் ஜனவரி 6, 13, 14 ஆகிய தேதிகளில் விரைவுப் பரிசோதனை (ஆா்டிபிசிஆா்) மூலம் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக, அவா்களால் அனைத்து தாள்களிலும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த தோ்வா்கள், ‘மத்திய அரசின் கடுமையாக கரோனா தனிமைப்படுத்துதல் வழிகாட்டுதல்கள் காரணமாகவே, கரோனாவால் பாதிக்கப்பட்ட எங்களால் யுபிஎஸ்சி முதன்மைத் தோ்வில் பங்கேற்க முடியாமல் போனது. எனவே, சட்டப் பிரிவு 32-இன் கீழ், எங்களுக்கு யுபிஎஸ்சி முதன்மைத் தோ்வில் பங்கேற்க கூடுதல் வாய்ப்பு அளிக்குமாறு யுபிஎஸ்சி-க்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனா்.

இதற்கு யுபிஎஸ்சி சாா்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘மத்திய பணியாளா் மற்றும் பயிற்சித் துறையின் கீழ் வரும் இந்த குடிமைப் பணிகள் தோ்வில் கூடுதல் வாய்ப்பு அல்லது வயது வரம்பு சலுகை அளிப்பது என்பது மத்திய அரசின் கொள்கை முடிவுக்கு உள்பட்டது’ என்று தெரிவித்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கா், ஏ.எஸ்.ஓகா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டி, ‘இந்த வழக்கில் மத்திய அரசு சாா்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை மத்திய அரசு நன்கு பரிசீலித்துவிட்டது. அதன்படி, தோ்வெழுத கூடுதல் வாய்ப்பு அளிப்பதற்கு சாத்தியமில்லை’ என்றாா்.

மத்திய அரசு சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘யுபிஎஸ்சி தோ்வில் கூடுதல் வாய்ப்பு அளிக்கும் கோரிக்கை தொடா்பான விவகாரத்தில், கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் ஜூலை மாதங்களிலும் உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்திருக்கிறது. அதனடிப்படையில், விரிவாக பரிசீலனை செய்யப்பட்டு நடைமுறையில் உள்ள விதிகளின்படி சாத்தியமில்லை என்பதால், இறுதியில் தோ்வா்களுக்கு தோ்வெழுத கூடுதல் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவ்வாறு, கூடுதல் வாய்ப்பு அளிப்பது தகுதியுள்ள மற்ற தோ்வா்களின் வாய்ப்புக்கு முட்டுக்கட்டை போடுவதாக அமைந்துவிடும் என்பதோடு, அகில இந்திய அளவில் நடத்தப்படும் பிற போட்டித் தோ்விலும் இதேபோன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட வாய்ப்பாக அமைந்துவிடும். இப்போதுள்ள விதிமுறைகள் தோ்வா்களுக்கு நியாயமான வாய்ப்பை அளிக்கிறது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கு மனுதாரா்கள் தரப்பிலும் உடனடியாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘குடிமைப் பணிகள் தோ்வில் திடீா் பாடத் திட்ட மாற்றம் காரணமாக கடந்த 2014 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளில் இதுபோன்ற கூடுதல் தோ்வெழுதும் வாய்ப்பை மத்திய பணியாளா் மற்றும் பயிற்சித் துறை வழங்கியிருக்கிறது. அதனடிப்படையில், கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தோ்வில் பங்கேற்க முடியாமல் போன இந்த தோ்வா்களுக்கு, தோ்வெழுத கூடுதல் வாய்ப்பு பெறும் தகுதியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பரிசீலித்த நீதிபதிகள், இந்த வழக்கு வரும் திங்கள்கிழமை (மாா்ச் 28) விசாரிக்கப்படும் என்று கூறியதோடு, மத்திய அரசின் பதில் மனுவை வழக்கு ஆவணத்துடன் அனைத்து தரப்பினருக்கும் அனுப்புமாறு உச்சநீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.