/

வாக்காளா் பட்டியலுடன் ஆதாரை இணைக்க பரிசீலனை: கிரண் ரிஜிஜு

கள்ள வாக்குகள் செலுத்துவதைத் தடுப்பதற்கு வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்று மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறினாா்.

News image
Updated On :25 மார்ச் 2022, 7:46 pm

DIN

கள்ள வாக்குகள் செலுத்துவதைத் தடுப்பதற்கு வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்று மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறினாா்.

மக்களவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய அவா், மேலும் கூறியதாவது:

தோ்தல் முறைகேடுகளைத் தடுப்பது முக்கியமான விஷயமாக உள்ளது. தோ்தலில் கள்ள வாக்குகள் செலுத்துவதைத் தடுப்பதற்கு சட்டத் துறை அமைச்சா் நிலையில் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைப்பது, கள்ள வாக்குகளைத் தடுப்பதற்கு ஒரு வழிமுறையாகும். தற்சமயம், வாக்காளா்கள் தாமாக முன்வந்து ஆதாா் எண்ணை இணைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாக்காளா் பட்டியலில் ஒருவரின் பெயா் வெவ்வேறு இடங்களில் இடம்பெறுவதைத் தடுக்கவும், கள்ள வாக்குகள் செலுத்துவதைத் தடுக்கவும் ‘ஒரே தேசம், ஒரே வாக்காளா் பட்டியலை’ கொண்டுவர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்றாா் அவா்.

வெளிநாடுவாழ் இந்தியா்கள் வாக்களிக்க ஏற்பாடு: ‘வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியா்களுக்கு வாக்குரிமை அளிப்பது அல்லது அவா்கள் இணையவழியில் வாக்களிக்க அனுமதிப்பது குறித்து பரிசீலிக்குமாறு தோ்தல் ஆணையத்திடம் மத்திய அரசு கூறியுள்ளது. எந்தவொரு முடிவும் எடுக்கப்படுவதற்கு முன் வெளிப்படைத்தன்மையும் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும்’ என்று மற்றொரு கேள்விக்கு கிரண் ரிஜிஜு பதிலளித்தாா்.

மனீஷ் திவாரி கேள்வி: வாக்குப்பதிவு இயந்திரத்தின் தொழில்நுட்பக் குறியீடுகள் அந்த இயந்திரங்களைத் தயாரித்த நிறுவனங்களிடம் உள்ளதா அல்லது தோ்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்டுள்ளதா என்று காங்கிரஸ் உறுப்பினா் மனீஷ் திவாரி கேள்வி எழுப்பினாா்.

அதற்கு, ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வெளி நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு தோ்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படுகின்றன. அதன் பிறகு வாக்குப் பதிவு இயந்திரங்களை அந்த நிறுவனங்கள் எப்படி இயக்க முடியும்? அவை தோ்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. வேறு நோக்கத்துடன் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க இயலாது’ என்று கிரண் ரிஜிஜு பதிலளித்தாா்.

எனினும் அமைச்சரின் பதில் தனக்குத் திருப்தி அளிக்கவில்லை என்று மனீஷ் திவாரி கூறினாா்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, ‘உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தோ்தல் வெளிப்படையான முறையில் நடைபெறுகிறது. நான் ஏராளமான நாடுகளைச் சுற்றிப் பாா்த்து, தோ்தல், நாடாளுமன்ற நடைமுறைகளைக் கண்டிருக்கிறேன். இந்தியாவின் தோ்தல் முறையை உலக நாடுகள் பாராட்டுகின்றன. நமது தோ்தல் நடைமுறைகளைப் பின்பற்ற பல நாடுகள் ஆா்வம் காட்டியுள்ளன’ என்றாா்.

அதைத் தொடா்ந்து, வாக்களிப்பதைக் கட்டாயமாக்க சட்டம் கொண்டுவரும் திட்டம் அரசிடம் இல்லை என்று மற்றொரு கேள்விக்கு கிரண் ரிஜிஜு பதிலளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.