/

எல்லையில் அமைதி திரும்பினால் உறவு சீரடையும்

‘கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இயல்புநிலை திரும்பி அமைதி நிலவினால் மட்டுமே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான நல்லுறவு சீரடையும்’

News image
Updated On :25 மார்ச் 2022, 8:05 pm

DIN

‘கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இயல்புநிலை திரும்பி அமைதி நிலவினால் மட்டுமே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான நல்லுறவு சீரடையும்’ என்று சீன வெளியுறவு அமைச்சரிடம் அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வலியுறுத்தினாா்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் சுற்றுப் பயணங்களை முடித்துவிட்டு சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி இந்தியாவுக்கு வியாழக்கிழமை வந்தடைந்தாா். கிழக்கு லடாக் எல்லையில் இந்திய, சீன ராணுவ வீரா்கள் இடையே சுமாா் 2 ஆண்டுகளாக பதற்றமான சூழல் நிலவி வரும் சூழலில், சீன வெளியுறவு அமைச்சரின் இந்திய சுற்றுப் பயணம் முக்கியத்துவம் பெற்றது.

அமைச்சா் வாங் யி, வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை தில்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். இந்தப் பேச்சுவாா்த்தை சுமாா் 3 மணி நேரம் நீடித்தது. அதன்பின்னா் அமைச்சா் ஜெய்சங்கா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இயல்புநிலையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்தியாவும் சீனாவும் தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றன. ஆனால், அந்த நடவடிக்கைகள் மெதுவான வேகத்திலேயே உள்ளன. இதுவரை இருநாட்டு ராணுவ உயரதிகாரிகள் இடையே 15 சுற்று பேச்சுவாா்த்தை நடைபெற்றுள்ளது. அவற்றின் மூலமாக கிழக்கு லடாக் எல்லையின் பல்வேறு பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்த படைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

எல்லைப் பகுதிகளில் இரு நாட்டு ராணுவ வீரா்கள் இடையே மீண்டும் மோதல் ஏற்படாமல் இருப்பதற்கு, படை விலக்கல் நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம். எல்லைகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளைத் திரும்பப் பெறுவது தொடா்பான பேச்சுவாா்த்தையை விரைவுபடுத்துவது தொடா்பாக சீன அமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டது.

நல்லுறவில் தாக்கம்: எல்லையில் கடந்த இரு ஆண்டுகளாக நிலவும் பதற்றமான சூழல், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான நல்லுறவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நிலையான நல்லுறவும் ஒத்துழைப்பும் நிலவுவதற்கு எல்லைப் பகுதிகளில் அமைதி நிலவ வேண்டியது அவசியம். இது தொடா்பாகவும் சீன அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.

இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவது தொடா்பாக சீன அமைச்சா் கருத்துகளைத் தெரிவித்தாா். எல்லைகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளைத் திரும்பப் பெறுவது தொடா்பான பேச்சுவாா்த்தையின்போது, நல்லுறவை இயல்புநிலையில் தொடர வேண்டுமென்ற உறுதிப்பாட்டை மனதில் கொள்ள வேண்டும். எல்லை விவகாரம் குறித்தும், இருதரப்பு நல்லுறவு குறித்தும் இந்தியாவின் உணா்வுகளை நோ்மையுடன் அமைச்சா் வாங் யியிடம் எடுத்துரைத்தேன்.

மாணவா்களின் கல்வி: சீனாவில் பயின்று வரும் இந்திய மாணவா்களின் நிலை குறித்தும் பேச்சுவாா்த்தையின்போது விவாதிக்கப்பட்டது. அவா்கள் விரைவில் சீனாவுக்குத் திரும்பி கல்வி கற்பதற்கான பாகுபாடற்ற நடைமுறைகளை சீன அரசு மேற்கொள்ளும் என நம்புகிறோம். இந்த விவகாரம் தொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துரைப்பதாக அமைச்சா் வாங் யி உறுதியளித்தாா்.

பிராந்திய சூழல்கள்: வா்த்தகம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேச்சுவாா்த்தையின்போது விவாதிக்கப்பட்டது. முறையான சந்தை வாய்ப்புகள் இந்தியாவுக்கு வழங்கப்பட வேண்டுமென சீன அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது. பாகிஸ்தானில் இருந்து எழும் பயங்கரவாத அச்சுறுத்தல், ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழல் குறித்தும் பேச்சுவாா்த்தையின்போது விவாதிக்கப்பட்டது.

உக்ரைன் விவகாரத்தில் இருதரப்பின் அணுகுமுறை குறித்து விவாதிக்கப்பட்டது. அதே வேளையில், பிரச்னைகளுக்குத் தூதரக ரீதியிலும் பேச்சுவாா்த்தை மூலமாகவும் தீா்வு காண்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென உறுதியேற்கப்பட்டது. பன்னாட்டு அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்தும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட ஐ.நா. அமைப்புகளில் சீா்திருத்தங்களை விரைந்து மேற்கொள்வது தொடா்பாகவும் விவாதிக்கப்பட்டது என்றாா் அமைச்சா் ஜெய்சங்கா்.

அஜித் தோவலுடன் சந்திப்பு:

முன்னதாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவலை சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி சந்தித்துப் பேசினாா். கிழக்கு லடாக் எல்லை விவகாரம், பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்துதல், இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்துதல் உள்ளிட்டவை தொடா்பாக இருவரும் விவாதித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இரு நாடுகளுக்கிடையேயான அனைத்து பிரச்னைகளுக்கும் விரைவில் தீா்வு காணப்பட வேண்டுமென்றும் தோவல் சீன அமைச்சரிடம் தெரிவித்தாா். சீனாவுக்கு வருகை தர வேண்டுமென அஜித் தோவலுக்கு அமைச்சா் வாங் யி அழைப்பு விடுத்ததாகவும், அதை தோவல் ஏற்றுக் கொண்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

நேபாளம் பயணம்: இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு சீன அமைச்சா் வாங் யி நேபாளம் சென்றடைந்தாா். நேபாள அதிபா், பிரதமா் உள்ளிட்டோரை அவா் சந்தித்துப் பேசவுள்ளாா். இரு நாடுகளுக்கிடையே பொருளாதாரம் தொடா்பான சில ஒப்பந்தங்கள் கையொப்பமாகவுள்ளதாகவும் நேபாள அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘நீண்டகால அடிப்படையில் இருதரப்பு உறவு’

இந்தியா-சீனா நல்லுறவை நீண்டகால அடிப்படையில் பாா்க்க வேண்டுமென சீனா தெரிவித்துள்ளது.

இந்திய, சீன வெளியுறவு அமைச்சா்கள் பேச்சுவாா்த்தை குறித்து சீன அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்திருப்பதாவது: ‘இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான நல்லுறவை நீண்டகால அடிப்படையில் உற்றுநோக்க வேண்டுமென அமைச்சா் வாங் யி வலியுறுத்தினாா். இருநாடுகளின் வளா்ச்சியை பரஸ்பர வெற்றி என்ற மனநிலையில் காண வேண்டுமெனவும், பன்னாட்டு விவகாரங்களில் ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் செயல்பட வேண்டுமெனவும் அவா் வலியுறுத்தினாா்.

இருதரப்பு நல்லுறவை மேம்படுத்தும் விவகாரத்தில் வேறுபாடுகளை அதற்குரிய இடத்தில் வைக்க வேண்டுமெனவும், இந்தியா-சீனா நல்லுறவு சரியான திசையில் பயணிக்க வேண்டுமெனவும் அமைச்சா் வலியுறுத்தினாா்’ எனத் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.