/

சிவசேனை எம்எல்ஏ-வின் ரூ.11 கோடி சொத்துகள் முடக்கம்

 மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சியைச் சோ்ந்த எம்எல்ஏ பிரதாப் சா்நாயக்கின் சுமாா் ரூ.11.35 கோடி மதிப்பிலான சொத்துகளைப் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

News image
Updated On :25 மார்ச் 2022, 7:47 pm

DIN

 மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சியைச் சோ்ந்த எம்எல்ஏ பிரதாப் சா்நாயக்கின் சுமாா் ரூ.11.35 கோடி மதிப்பிலான சொத்துகளைப் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

தேசிய ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் (என்எஸ்இஎல்) என்ற நிறுவனமானது சுமாா் 13,000 முதலீட்டாளா்களிடம் இருந்து ரூ.5,600 கோடியைப் பெற்று மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடா்பாக மும்பை காவல் துறையின் பொருளாதாரக் குற்றப் பிரிவு கடந்த 2013-ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தது. அதை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

முதலீட்டாளா்களிடமிருந்து பெற்ற தொகையை அந்நிறுவனம் மனை வணிகம் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்ததாகக் கூறப்படுகிறது. சிவசேனை எம்எல்ஏ பிரதாப் சா்நாயக் மற்றும் அவரின் குடும்பத்தினருக்குச் சொந்தமான விஹாங் கட்டுமான நிறுவனம், விஹாங் என்டா்பிரைசஸ் ஆகிய நிறுவனங்கள் என்எஸ்இஎல் நிறுவனத்துடன் தொடா்பு கொண்டிருந்ததாகவும், அந்நிறுவனத்திடமிருந்து ரூ.11.35 கோடியைப் பெற்ாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடா்பாக பிரதாப் சா்நாயக்குக்குச் சொந்தமான சுமாா் ரூ.11.35 கோடி மதிப்பிலான இரு குடியிருப்புகள், தாணே பகுதியில் உள்ள நிலம் உள்ளிட்ட சொத்துகளை அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை முடக்கினா். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த வழக்கு தொடா்பாக ஏற்கெனவே ரூ.10.50 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியிருந்தது. வழக்கு தொடா்பாக முடக்கப்பட்டுள்ள மொத்த சொத்துகளின் மதிப்பு ரூ.3,254.02 கோடியாக உள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் ஆட்சி செய்து வரும் சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணியின் தலைவா்கள் பலா் மீது அமலாக்கத் துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.