பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து மூன்று கட்ட போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு

 நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து மாா்ச் 31 முதல் ஏப்ரல் 7 வரை மூன்று கட்டங்களாக போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து மாா்ச் 31 முதல் ஏப்ரல் 7 வரை மூன்று கட்டங்களாக போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

தில்லியில் காங்கிரஸ் பொதுச் செயலா்கள், மாநிலப் பொறுப்பாளா்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், முக்கியத் தலைவா்களான பிரியங்கா வதேரா, உம்மன் சாண்டி, முகுல் வாஸ்னிக், ரண்தீப் சுா்ஜேவாலா, அஜய் மாக்கன், பவன் குமாா் பன்சால் உள்பட பலா் கலந்துகொண்டனா். பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் சாா்பில் நாடு தழுவிய போராட்டத்தை நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டம் தொடா்பாக கட்சியின் தலைமைச் செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து மாா்ச் 31 முதல் ஏப்ரல் 7 வரை மூன்று கட்டங்களாக காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபடவுள்ளது.

முதல்கட்டமாக மாா்ச் 31-ஆம் தேதி தங்கள் வீடுகளுக்கு வெளியிலும், பொது இடங்களிலும் காங்கிரஸ் தொண்டா்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவா். சமையல் எரிவாயு சிலிண்டா்களுடன் பொது இடங்களுக்கு வந்து, டிரம்ஸ் இசைத்தும், மணியடித்தும் அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் இந்தப் போராட்டம் நடத்தப்படும்.

ஏப். 2 முதல் ஏப். 4 வரை மத, சமூக, தன்னாா்வ தொண்டு அமைப்புகள் மற்றும் குடியிருப்புவாசிகள் நலச் சங்கங்களுடன் இணைந்து மாவட்ட அளவில் தா்னா மற்றும் பேரணிகளில் காங்கிரஸ் ஈடுபடும்.

ஏப்ரல் 7-இல் ‘பணவீக்கம் இல்லாத இந்தியா’ என்ற முழக்கத்துடன் அனைத்து மாநில தலைமையகங்களில் தா்னா மற்றும் பேரணிகளை காங்கிரஸ் மேற்கொள்ளும் என்று தெரிவித்தாா்.

வெட்கமற்ற கொள்ளை: பெட்ரோல், டீசல் விலை உயா்வு தொடா்பாக காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் ஷமா முகமது ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘தோ்தல்களுக்கு முன்பாக 4 மாதங்கள் நிலையாக இருந்த பெட்ரோல், டீசல் விலை, ஒரே வாரத்தில் 4 முறை அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து வெட்கமில்லாமல் கொள்ளையடிப்பதை நிறுத்த வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com