13.94 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்கும் எல்ஐசி பங்குகளை குறைத்து விற்கப்படுவது ஏன்? - ராகுல்காந்தி கேள்வி

13.94 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்கும் எல்ஐசி பங்குகளை குறைத்து விற்கப்படுவது ஏன்? - ராகுல்காந்தி கேள்வி

13.94 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்கும் நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி மதிப்புமிக்க சொத்துக்களின் பங்குகளை குறைந்து விற்கப்படுவது ஏன்?


13.94 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்கும் நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி மதிப்புமிக்க சொத்துக்களின் பங்குகளை குறைந்து விற்கப்படுவது ஏன்? என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.  

மத்திய அரசு, எல்ஐசி நிறுவனத்தில் கொண்டுள்ள 3.5 சதவீத பங்குகளை பொதுப் பங்கு வெளியீட்டின் மூலமாக விற்பனை செய்வதன் மூலம் ரூ.21,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த பங்கு வெளியீடு புதன்கிழமை (மே 4) தொடங்கி திங்கள்கிழமை வரை (மே 9) நடைபெறவுள்ளது.

இதில், எல்ஐசி பாலிசிதாரா்களுக்கு ரூ.60 தள்ளுபடி, ஊழியா்கள் மற்றும் பிற முதலீட்டாளா்களுக்கு ரூ.45 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. எல்ஐசி பங்குகள் சந்தையில் 17-ஆம் தேதி பட்டியலிடப்படவுள்ளது.

உள்நாட்டு நிறுவனங்களுக்கு ரூ.949 விலையில் பங்குகளை ஒதுக்கீடு செய்து எல்ஐசி ஏற்கெனவே ரூ.5,627 கோடியை திரட்டியுள்ளது. நிதி நிறுவனங்களுக்கு 5.9 கோடி பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், 4.2 கோடி பங்குகள் (71.12%) 15 உள்நாட்டு பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக பங்குச் சந்தையில் எல்ஐசி தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எல்ஐசி பங்குகளில் 10 சதவீதம் வரை பொதுப்பங்காக வெளியிடப்படும் என்று முதலில் தெரிவிக்கப்பட்ட நிலையில், உக்ரைன் போா் உள்ளிட்ட காரணங்களால் பங்குச் சந்தை நிலவரம் சாதகமாக இல்லாததால், அது 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. பின்னா் மேலும் குறைத்து 3.5 சதவீதப் பங்குகளே தற்போது விற்பனைக்கு வரவுள்ளது. பங்குச் சந்தை நிலவரம் சாதகமாகும்போது கூடுதல் பங்குகள் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியானது. 

இந்த நிலையில் எல்ஐசி பொதுப் பங்கு வெளியீட்டுக்கு இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் முதலீட்டாளா்களிடம் அமோக வரவேற்பு காணப்பட்டது.

பங்குச் சந்தையில் வியாழக்கிழமை மாலை 7 மணி தரவுகளினன் படி, எல்ஐசி பொதுப் பங்கு வெளியீட்டில் 16.20 கோடி பங்குகள் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், 16.68 கோடி பங்குகளுக்கு முதலீட்டாளா்களிடமிருந்து விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. விற்பனைக்கு வந்த பங்குகளை விட 1.03 மடங்கு அதிகமாக பங்குகளை வாங்க முதலீட்டாளா்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இருப்பினும், தகுதிவாய்ந்த நிதி நிறுவனங்கள் (கியூஐபி) மற்றும் நிறுவனம் சாரா முதலீட்டாளா்களிடமிருந்து (என்ஐஐ) எல்ஐசி பங்கு வெளியீட்டிற்கான வரவேற்பு குறைவாகவே உள்ளது. நிறுவனம் சாரா முதலீட்டாளா்கள் பிரிவில் 47 சதவீதமும், கியூஐபி பிரிவில் 40 சதவீதத்துக்கும் குறைவாகவே பங்குகளை வாங்க விண்ணப்பங்கள் வந்துள்ளன.

சில்லறை முதலீட்டாளா்களுக்கு ஒதுக்கப்பட்ட 6.9 கோடி பங்குகளில் சுமாா் 93 சதவீத பங்குகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 13.94 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்கும் நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி மதிப்புமிக்க சொத்துக்களின் பங்குகளை குறைந்து விற்கப்படுவது ஏன்? என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.  

இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரை பக்கத்தில், 13.94 லட்சம் வேலைவாய்ப்புகள், 30 கோடி பாலிசிதாரர்கள், 39 லட்சம் கோடி சொத்துக்கள், முதலீட்டின் மீதான வருவாய் வரும் நிறுவனம் எல்ஐசி. 

இருப்பினும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு எல்ஐசியைக் குறைத்து மதிப்பிட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டியுள்ள ராகுல்காந்தி, 

"இந்தியாவின் மதிப்புமிக்க சொத்துக்களில் ஒன்று ஏன் மிகக் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது? என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com