கோதுமை ஏற்றுமதிக்கு தடை: -  காரணம் என்ன?

உள்நாட்டில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கோதுமை ஏற்றுமதிக்கு தடை: -  காரணம் என்ன?
Published on
Updated on
2 min read


புதுதில்லி: உள்நாட்டில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.  பிற நாடுகளின் கோரிக்கைக்களுக்கு ஏற்ப அங்கு கோதுமைக்கு தேவை இருப்பின் மட்டுமே, மத்திய அரசின் அனுமதியோடு ஏற்றுமதி செய்யலாம் என வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாத பிற்பகுதியில் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் தொடங்கியதில் இருந்து கருங்கடல் பகுதியில் இருந்து கோதுமை ஏற்றுமதி குறைந்ததை அடுத்து, உலகளவில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த இரண்டு மாதங்களாக நாட்டின் பல பகுதிகளில் கோதுமை விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. 

இதையடுத்து தனியார் நிறுவனங்கள் அதிக விலைக்கு கோதுமையை வாங்குவதால் விவசாயிகள் அரசு கொள்முதலுக்கு தருவதை குறைத்துக்கொண்டனர். 

கோதுமையை தனியார் நிறுவனங்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்தால் உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டது. எகிப்து உள்ளிட்ட பலநாடுகள் இந்தியாவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்ய திட்டமிட்டிருந்தது. 

இந்நிலையில், மத்திய அரசு கோதுமை ஏற்றுமதிக்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டின் ஒட்டுமொத்த உணவுப் பாதுகாப்பை நிர்வகிப்பதற்கும், உள்நாட்டு சந்தையில் விலையை கட்டுக்குள் வைப்பதற்கவே" அரசு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்னர் ஏற்றுமதிக்கான மேற்கொள்ளப்பட்ட  ஒப்பந்தங்கள் நிறைவேற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், அரசின் அனுமதியுடன் தேவைக்கேற்ப ஏற்றுமதி செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த திடீர் விலை உயர்வால் அண்டை நாடுகள் மற்றும் சில பின்தங்கிய நாடுகள் பெரும் பாதிபப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே, இவர்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் கடைமை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

"இந்தியா தனது கோதுமை ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவற்காக மொராக்கோ, துனிசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம், துருக்கி, அல்ஜீரியா மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கு வர்த்தகப் பிரதிநிதிகளை அன்மையில் அனுப்பியிருந்த நிலையில், இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. 

2022-23 ஆண்டில் நாட்டின் கோதுமை ஏற்றுமதியை ஒரு கோடி  டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், விலை உயர்வு காரணமாக இந்த ஏற்றுமதி தடை உத்தரவை பிறப்பிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. 

ஏப்ரலில் 7.79 சதவிகிதமாக உயர்ந்துள்ள பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகவும் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்தியா கோதுமை ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த விரும்பவில்லை என்று நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். 

சீனாவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய கோதுமை உற்பத்தி மையம் இந்தியா. 

இந்நிலையில், கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்திருப்பது விவசாயிகளுக்கு எதிரானது என்றும், கரோனாவிற்கு பின்பு இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி மிகவும் மெதுவாக உள்ளது  என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com