விஸ்மயா தற்கொலை: கணவருக்கு 10 ஆண்டு சிறை; ரூ.12.50 லட்சம் அபராதம்

விஸ்மயா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட கணவர் கிரண்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை  விதிக்கப்பட்டுள்ளது.
விஸ்மயா தற்கொலை: கணவருக்கு 10 ஆண்டு சிறை; ரூ.12.50 லட்சம் அபராதம்
விஸ்மயா தற்கொலை: கணவருக்கு 10 ஆண்டு சிறை; ரூ.12.50 லட்சம் அபராதம்

கொல்லம்: கேரளத்தில் வரதட்சணைக் கொடுமை காரணமாக ஆயுர்வேத மருத்துவ மாணவியான விஸ்மயா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட கணவர் கிரண்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை  விதிக்கப்பட்டுள்ளது.

வரதட்சணைக் கொடுமையால் விஸ்மயா தற்கொலை செய்து கொண்ட வழக்கை விசாரித்து வந்த கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சுஜித், கணவர் கிரண்குமார் குற்றவாளி என்று நேற்று தீர்ப்பளித்த நிலையில், இன்று தண்டனை விவரங்களை அறிவித்தார்.

மேலும், கிரண்குமாருக்கு ரூ.12.50 லட்சம் அபராதம் விதித்ததுடன், அதில் ரூ. 2 லட்சத்தை விஸ்மயா பெற்றோருக்கு அளிக்கவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரதட்சணை கொடுமை காரணமாக 23 வயது கல்லூரி இறுதியாண்டு மாணவி விஸ்மயா தற்கொலை செய்து கொண்டது கேரளத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

விஸ்மயா தற்கொலை வழக்கில் கணவர் கிரண்குமார் குற்றவாளி என்று நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. கிரண்குமாருக்கான தண்டனை விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்று நேற்று ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தண்டனை விவரம் வெளியாகியுள்ளது.

விஸ்மயா மீது கணவரின் வரதட்சணை துன்புறுத்தலே, அவரை தற்கொலை வரை இட்டுச் சென்றதாக புகார் கூறப்பட்டு, கணவரின் கொடுமைக்குள்ளான, விஸ்மயா அனுப்பியதாக சில புகைப்படங்களும் ஊடகங்களில் வெளியானது. இதையடுத்து கேரளத்தில் வரதட்சணைக்கு எதிரான விழிப்புணர்வு போராட்டங்கள் அதிகரித்தன.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஸ்மயா. ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த போது, கிரண்குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின்போது 100 சவரன் நகை, ரூ.10 லட்சம் ரொக்கம், டொயாட்டா கார், நிலம் என ஏராளமான வரதட்சணையை பெண் வீட்டார் கொடுத்துள்ளனர். ஆனாலும் கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் வீட்டில் துன்புறுத்தல் அதிகரித்துள்ளது. வரதட்சணை கேட்டு கணவர் அடித்துத் துன்புறுத்தியதால், மன வேதனையில் இருந்த விஸ்மயா, கடந்த ஆண்டு ஜூன் 21ஆம் தேதி கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அறிந்ததும், விஸ்மயாவின் பெற்றோர், காவல்நிலையத்தில் கிரண்குமார் மீது புகார் அளித்தனர். வழக்கை தீவிரமாக விசாரித்த காவல்துறையினர், வரதட்சணை கொடுமையால்தான் விஸ்மயா தற்கொலை செய்து கொண்டதாக கிரண்குமார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

வழக்கு விசாரணை நிறைவடைந்து, நேற்று விஸ்மயா தற்கொலையில் கணவர்தான் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, அவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com