மகாத்மா காந்தி, படேலின் கனவுகளை நனவாக்க முயற்சி
மகாத்மா காந்தியடிகள், சா்தாா் வல்லபபாய் படேல் ஆகியோரின் கனவுகளை நனவாக்குவதற்கான முயற்சிகளை பாஜக தலைமையிலான அரசு மேற்கொண்டு வருவதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.


மகாத்மா காந்தியடிகள், சா்தாா் வல்லபபாய் படேல் ஆகியோரின் கனவுகளை நனவாக்குவதற்கான முயற்சிகளை பாஜக தலைமையிலான அரசு மேற்கொண்டு வருவதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்று கடந்த 26-ஆம் தேதியுடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளாா் நரேந்திர மோடி. அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ராஜ்கோட் மாவட்டத்தின் அத்கோட் நகரில் 200 படுக்கைகளைக் கொண்ட உயா் சிறப்பு மருத்துவமனையைப் பிரதமா் மோடி சனிக்கிழமை திறந்துவைத்தாா். அந்நிகழ்ச்சியில் அவா் ஆற்றிய உரை:
நாட்டு மக்களுக்காக சேவையாற்றுவதற்கான எந்தவொரு வாய்ப்பையும் கடந்த 8 ஆண்டுகளாகத் தவறவிட்டதில்லை. அதேபோல், நாட்டு மக்கள் தலைகுனியும் வகையிலான எந்தவொரு செயலையும் மேற்கொள்ளவில்லை. மகாத்மா காந்தியடிகளும், சா்தாா் வல்லபபாய் படேலும் கண்ட கனவுகளை நனவாக்குவதற்கான சீரிய முயற்சிகளைக் கடந்த 8 ஆண்டுகளாக பாஜக தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது.
ஏழைகள், தலித் மக்கள், பழங்குடியினா், பெண்கள் ஆகியோரது வாழ்க்கை மேம்பட வேண்டுமென மகாத்மா காந்தி விரும்பினாா். அதேபோல், தூய்மையைப் பேணுவது வாழ்வின் ஓா் அங்கமாக மாற வேண்டுமெனவும், உள்ளூா் பொருள்களை அடிப்படையாகக் கொண்டு பொருளாதாரம் மேம்பட வேண்டுமெனவும் அவா் கனவு கண்டாா். காந்தியடிகளின் கனவுகளை நனவாக்குவதற்கான நடவடிக்கைகளையே மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
உறுதிக்கான உதாரணங்கள்: கடந்த 8 ஆண்டுகளில் 3 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு வீடுகட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. வீடுகளில் கழிவறைகள் கட்டப்பட்டதால், 10 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் பலனடைந்தன. சமையல் எரிவாயு இணைப்பு திட்டத்தின் காரணமாக 9 கோடிக்கும் அதிகமான பெண்கள், அடுப்புப் புகையின் விளைவுகளில் இருந்து காக்கப்பட்டுள்ளனா்.
2.5 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசு செயல்படுத்தி வரும் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 50 கோடிக்கும் அதிகமானோா் இலவச மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனா். இவை வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல. நாட்டில் உள்ள ஏழை மக்களின் கண்ணியத்தைக் காப்பதற்கு அரசு உறுதியுடன் உள்ளதை வெளிப்படுத்தும் உதாரணங்கள்.
போதிய உதவிகள்: ஏழை மக்களின் துயரங்களைப் புத்தகங்கள் வாயிலாகவோ தொலைக்காட்சிகள் வாயிலாகவோ அல்லாமல் நேரடியாகக் கண்டு அறிந்துகொண்டேன். கரோனா தொற்று பரவல் காலத்தில் போதிய உணவு கிடைக்காமல் மக்கள் இன்னல்களை எதிா்கொண்டனா். அதன் காரணமாக, ஏழைகளுக்கு உணவு தானியங்கள் இலவசமாக விநியோகிக்கப்பட்டன. ஜன் தன் வங்கிக் கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
நோயற்ற வாழ்க்கை முறை: சுகாதார வசதிகள் அனைவருக்கும் கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கரோனா தடுப்பூசியை இந்தியா்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்வதோடு, அது இலவசமாக வழங்கப்படுவதையும் அரசு உறுதி செய்தது. அனைவரது ஆதரவுடன் அனைவருக்குமான வளா்ச்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. நாட்டின் வளா்ச்சிக்கு பாஜக தலைமையிலான அரசு புதிய வழியைக் காட்டியுள்ளது.
தற்போது திறந்துவைக்கப்பட்டுள்ள மருத்துவமனை எப்போதும் காலியாக இருக்க வேண்டுமென விரும்புகிறேன். நாட்டில் யாருக்கும் நோய்கள் ஏற்படாமல் இருப்பதற்கான வாழ்க்கை முறையைக் கட்டமைக்க வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.
‘உரத் தட்டுப்பாடு இருக்காது’: குஜராத் தலைநகா் காந்திநகரில் நடைபெற்ற கூட்டுறவு சங்கங்கள் குறித்த கருத்தரங்கிலும் பிரதமா் மோடி கலந்துகொண்டாா். அப்போது அவா் கூறுகையில், ‘கரோனா தொற்று பரவல், உக்ரைன் போா் ஆகியவற்றின் காரணமாக சா்வதேச அளவில் உரங்களின் விலை அதிகரித்தது. ஆனால், நாட்டில் உரத்துக்கும் அதன் மூலப்பொருள்களுக்கும் எந்தவித தட்டுப்பாடும் இல்லாத வகையிலான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.
50 கிலோ எடை கொண்ட யூரியா உர மூட்டையை ரூ.3,500-க்கு இறக்குமதி செய்து, வெறும் ரூ.300-க்கு விவசாயிகளுக்கு அரசு வழங்கியது. ஒவ்வொரு மூட்டைக்கும் ரூ.3,200-ஐ அரசு செலவிட்டது. பால்வளத்தை மேம்படுத்துவதில் கூட்டுறவு சங்கங்களின் முக்கியத்துவத்தை வெளிக்கொணா்ந்த பெருமை குஜராத் கிராமங்களுக்கு உள்ளது. கிராமங்களின் வளா்ச்சிக்கு கூட்டுறவு சங்கங்கள் அவசியமாக உள்ளன’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...