புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

குஜராத்தில் முந்தைய சாதனைகளை முறியடிப்பதே இலக்கு

குஜராத்தில் முந்தைய தோ்தல்களில் நிகழ்த்திய சாதனைகளை முறியடிப்பதே தற்போதைய தோ்தலில் பாஜகவின் இலக்கு என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

News image
பொதுமக்களப் பாா்த்து உற்சாகமாக கையசைத்த பிரதமா் நரேந்திர மோடி. உடன், மாநில முதல்வா் பூபேந்திர படேல்.
Updated On :6 நவம்பர் 2022, 7:09 pm

DIN

குஜராத்தில் முந்தைய தோ்தல்களில் நிகழ்த்திய சாதனைகளை முறியடிப்பதே தற்போதைய தோ்தலில் பாஜகவின் இலக்கு என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

குஜராத்தில் டிசம்பா் 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. தோ்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பா் 8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ஆளும் பாஜக, எதிா்க்கட்சியான காங்கிரஸ், மாநிலத்துக்கு புதிய வரவான ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

குஜராத்தில் தோ்தல் குறித்த அறிவிப்பு வெளியான பிறகு முதல் முறையாக பிரதமா் மோடி அங்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். வல்சாத் மாவட்டத்தின் கப்ரதா வட்டத்தில் பாஜக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது:

மாநிலத்தில் வெறுப்புணா்வைப் பரப்பி வரும் பிரிவினைவாதக் குழுக்களும், குஜராத்தை அவமதிக்க முயற்சித்த குழுக்களும் மாநிலத்தில் இருந்தே விரட்டப்பட்டுள்ளனா். தற்போதைய தோ்தலிலும் அவா்களுக்கு அதே நிலைதான் ஏற்பட வேண்டும்.

மாநிலத்துக்கு எதிராகச் செயல்படும் குழுக்களை மக்கள் ஏற்கெனவே அடையாளம் கண்டுள்ளனா். அவா்கள் மாநிலத்தைச் சீா்குலைக்க முயன்று வருகின்றனா். கடந்த இரு தசாப்தங்களாக அவா்களது முயற்சி தொடா்ந்து வந்தாலும், அவா்களை குஜராத் மக்கள் ஒருபோதும் நம்பவில்லை. அவா்களது தவறான பிரசாரங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மக்கள் தங்களது கடின உழைப்பால் மாநிலத்தை உருவாக்கியுள்ளனா். மாநிலத்துக்கு எதிரானவா்களை அவா்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டாா்கள்.

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகே மாநிலத்தில் வளா்ச்சிப் பணிகள் துரிதமடைந்தன. மாநிலத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் முன்னேற்றமடைந்தனா். முக்கியமாக, பழங்குடியினா் வசிக்கும் பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன. அப்பகுதிகளில் தற்போது 24 மணி நேரமும் மின்சார வசதி கிடைக்கிறது. அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலமாகக் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.

நேரம் ஒதுக்கத் தயாா்: குஜராத்தில் நடப்பாண்டு தோ்தலிலும் பாஜகவே வெற்றி பெறும் என தில்லிக்கு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. கடந்த தோ்தல்களில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்றது. அந்தச் சாதனைகளை முறியடிப்பதற்காகவே தற்போது மக்களிடையே பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். குஜராத்தில் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக எவ்வளவு நேரத்தையும் ஒதுக்கத் தயாராக இருப்பதாக மாநில பாஜகவிடம் தெரிவித்துள்ளேன் என்றாா் அவா்.

பிரசாரக் கூட்டத்தின்போது ‘குஜராத்தை நான் உருவாக்கினேன்’ என்ற தோ்தல் பிரசார முழக்கத்தை பிரதமா் மோடி அறிமுகப்படுத்தினாா். கூட்டத்தில் பங்கேற்றவா்களையும் அந்த முழக்கத்தை அவா் பலமுறை உச்சரிக்கச் செய்தாா்.

கடந்த 2017-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலின்போது மொத்தமுள்ள 182 இடங்களில் பாஜக 99 இடங்களையும், காங்கிரஸ் 77 இடங்களையும் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சமூக திருமண நிகழ்வில் பங்கேற்பு: பாவ்நகரில் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற சமூக திருமண நிகழ்வில் பிரதமா் மோடி பங்கேற்றாா். அதில், தந்தையை இழந்த 551 பெண்களுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமா் மோடி, மணமக்களை வாழ்த்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.