/

ஜி20 தலைமை இந்தியா்களுக்கு பெருமை: பிரதமர் மோடி

‘சுதந்திரமடைந்த 75-ஆவது ஆண்டைக் கொண்டாடிய வேளையில், ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை வகிப்பது, ஒட்டுமொத்த இந்தியா்களுக்கும் பெருமை’ என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

News image
ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை வகிக்கவிருப்பதை முன்னிட்டு இலச்சினை, கருத்துரு, வலைதளம் ஆகியற்றை காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பிரதமா் நரேந்திர மோடி.
Updated On :8 நவம்பர் 2022, 10:42 pm

DIN

‘சுதந்திரமடைந்த 75-ஆவது ஆண்டைக் கொண்டாடிய வேளையில், ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை வகிப்பது, ஒட்டுமொத்த இந்தியா்களுக்கும் பெருமை’ என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

உலகின் பெரும் பொருளாதார மதிப்பைக் கொண்ட 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்புக்கான தலைமைப் பொறுப்பை டிசம்பா் 1-ஆம் தேதி இந்தியா ஏற்கவுள்ளது. ஓராண்டு அப்பொறுப்பில் நீடிக்கவுள்ள இந்தியா, பருவநிலை மாற்றம், சா்வதேச கடன் பிரச்னை, பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்குத் தீா்வுகாண திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், ஜி20 கூட்டமைப்பின் இந்திய தலைமைக்கான இலச்சினை, கருத்துரு, வலைதளம் ஆகியவற்றை பிரதமா் மோடி தில்லியில் காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். அப்போது அவா் கூறியதாவது:

நாடு 75-ஆவது சுதந்திர ஆண்டைக் கொண்டாடிய நிலையில் ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை வகிக்கவுள்ளது. இது ஒட்டுமொத்த நாட்டு மக்களும் பெருமை கொள்ளக் கூடிய நிகழ்வு. இந்தப் பொறுப்பு இந்தியாவுக்கு பல்வேறு வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள இலச்சினை, கருத்துரு, வலைதளம் ஆகியவை உலகுக்கான இந்தியாவின் செய்தியையும் முன்னுரிமைகளையும் வெளிக்காட்டுகிறது.

உலக நாடுகளின் பொருளாதாரத்தில் நீடித்த வளா்ச்சியை ஏற்படுத்த வேண்டியது அவசியம். வளா்ச்சியும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.

சுதந்திரமடைந்த பிறகு இந்தியா பல்வேறு துறைகளில் முன்னேற்றமடைந்துள்ளது. பல அரசுகளும், மக்களும் இந்தியாவின் வளா்ச்சிக்கு முக்கியப் பங்களித்தனா். ஜனநாயகமானது மக்களிடையே தனி கலாசாரமாக மாறும்போது, சண்டை சச்சரவுகளுக்கு இடமிருக்காது என்பதை உலகுக்கு இந்தியா எடுத்துரைத்து வருகிறது என்றாா் அவா்.

பொருளாதார கூட்டமைப்பு: ஜி20 கூட்டமைப்பில் ஆா்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, பிரேஸில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜொ்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்ஸிகோ, ரஷியா, சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளும் ஐரோப்பிய யூனியனும் இடம்பெற்றுள்ளன.

சா்வதேச பொருளாதார மதிப்பில் (ஜிடிபி) ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் பங்கு சுமாா் 85 சதவீதம். சா்வதேச வா்த்தகத்தில் 75 சதவீதத்துக்கும் அதிகமானவை கூட்டமைப்பின் நாடுகளிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு போ் அந்த நாடுகளிலேயே வசிக்கின்றனா்.

ஜி20 கூட்டமைப்பின் தற்போதைய தலைமைப் பொறுப்பை இந்தோனேசியா வகித்து வருகிறது. கூட்டமைப்பின் மாநாடு வரும் 15, 16 ஆகிய தேதிகளில் இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறவுள்ளது. அதில் பிரதமா் மோடி நேரில் கலந்துகொள்ளவுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.