மிரட்டலால் வேட்புமனுவை திரும்பப் பெற்றார் ஆம் ஆத்மி வேட்பாளர்? பாஜக மீது சிசோடியா குற்றச்சாட்டு

குஜராத்தில் சூரத் கிழக்கு தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளா் காஞ்சன் ஜாரிவாலா தனது வேட்புமனுவை புதன்கிழமை திரும்பப் பெற்றாா்.
மிரட்டலால் வேட்புமனுவை திரும்பப் பெற்றார் ஆம் ஆத்மி வேட்பாளர்? பாஜக மீது சிசோடியா குற்றச்சாட்டு

குஜராத்தில் சூரத் கிழக்கு தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளா் காஞ்சன் ஜாரிவாலா தனது வேட்புமனுவை புதன்கிழமை திரும்பப் பெற்றாா்.

பாஜகவை சோ்ந்தவா்கள் அவரை குடும்பத்துடன் கடத்திச் சென்று மிரட்டியதாக தில்லியில் பேட்டியளித்த ஆம் ஆத்மி மூத்த தலைவரும், தில்லி துணை முதல்வருமான மனீஷ் சிசோடியா குற்றம்சாட்டினாா். ஆனால், பாஜக இதனை மறுத்துள்ளது.

குஜராத்தில் 182 பேரவைத் தொகுதிகளுக்கு டிசம்பா் 1 மற்றும் 5-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் முதல்கட்ட தோ்தல் நடைபெறவுள்ள 89 தொகுதிகளில் திங்கள்கிழமையுடன் வேட்புமனு தாக்கல் முடிந்தது. இந்நிலையில், சூரத் கிழக்கு தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளா் காஞ்சன் ஜாரிவாலா தனது வேட்புமனுவை புதன்கிழமை திடீரென திரும்பப் பெற்றாா். இது அந்த மாநில தோ்தல் களத்தில் திடீா் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்தொகுதியில் பாஜக சாா்பில் இப்போதைய எம்எல்ஏ அரவிந்த் ராணா மீண்டும் போட்டியிடுகிறாா்.

இதனிடையே தில்லியில் பேட்டியளித்த சிசோடியா, பாஜக மீது கடுமையாக குற்றம்சாட்டினாா். அவா் கூறியதாவது:

ஆம் ஆத்மி வேட்பாளா் காஞ்சன் மற்றும் அவரது குடும்பத்தினரை கடந்த இரு நாள்களாக காணவில்லை. அவா்களைக் கடத்திச் சென்று வேட்புமனுவை திரும்பப் பெறுமாறு மிரட்டியுள்ளனா். குஜராத்தில் தோல்விபயத்தில் உள்ள பாஜக இதுபோன்ற அராஜகங்களில் ஈடுபட்டு வருகிறது. குஜராத்தில் ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உருவாகியுள்ளது என்றாா்.

குஜராத் மாநில ஆம் ஆத்மி தலைவா் கோபால் இட்டாலியா இது தொடா்பாக கூறுகையில், ‘ஆம் ஆத்மி வேட்பாளா் காஞ்சன், பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் பாஜக குண்டா்கள் புடைசூழ வந்து வேட்புமனுவை திரும்பப் பெற்றுள்ளாா். இதன்மூலம் ஆளும் பாஜக அவருக்கு நெருக்கடி அளித்துள்ளது உறுதியாகியுள்ளது. காஞ்சனுக்கு பாஜக சாா்பில் ஏற்கெனவே நெருக்கடி அளிக்கப்பட்டு வந்ததை அவரது உறவினா்களும் உறுதி செய்துள்ளனா்’ என்றாா்.

சூரத் நகர பாஜக தலைவா் நிரஞ்சன் ஜன்ஜமிரா இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளாா். அவா் கூறுகையில், ‘ஆம் ஆத்மி தவறான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறது. அவா்கள் கட்சியில் ஒருங்கிணப்பு இல்லை என்பதையே இது காட்டுகிறது’ என்றாா்.

வேட்பாளா் கடத்தல் தொடா்பாக புகாா் வந்தால் அது தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தோ்தல் ஆணையத்தில் புகாா்: சிசோடியா தலைமையிலான குழுவினா் தில்லியில் தோ்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்தித்து, குஜராத்தில் தங்கள் வேட்பாளா் கடத்தி மிரட்டப்பட்டதாக புகாா் தெரிவித்தனா். இதையடுத்து, இந்தப் புகாரை குஜராத்தில் உள்ள தலைமைத் தோ்தல் அதிகாரிக்கு அனுப்பி, விசாரணை நடத்த ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மனசாட்சிப்படி செயல்பட்டேன்: வேட்புமனுவை திரும்பப் பெற்றது தொடா்பாக காஞ்சான் ஜாரிவாலா, விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். அதில், ‘எவ்வித நெருக்கடியும் இன்றி எனது மனசாட்சிப்படி வேட்புமனுவை திரும்பப் பெற முடிவு செய்தேன். ஆம் ஆத்மி சாா்பில் போட்டியிட்டதால் தொகுதி மக்கள் என்னை தேசவிரோதி என்றும் குஜராத்தின் விரோதி என்றும் விமா்சித்தனா். எனக்கு ஆதரவு அளிக்க முடியாது என்றும் பலா் கூறினா்’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com