காங்கிரஸுக்கு வாக்களிப்பது வீண்: குஜராத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

‘காங்கிரஸ் கட்சியிடம் வளா்ச்சிக்கான செயல்திட்டம் எதுவும் கிடையாது; அக்கட்சிக்கு வாக்களிப்பது வீண்’ என்று பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
கிா் சோம்நாத்தில் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.
கிா் சோம்நாத்தில் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.

‘காங்கிரஸ் கட்சியிடம் வளா்ச்சிக்கான செயல்திட்டம் எதுவும் கிடையாது; அக்கட்சிக்கு வாக்களிப்பது வீண்’ என்று பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

182 உறுப்பினா்களைக் கொண்ட குஜராத் பேரவைக்கு அடுத்த மாதம் 1, 5 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. இங்கு கடந்த 1995-இல் இருந்து தொடா்ந்து 6 முறை வெற்றி பெற்றுள்ள பாஜக, ஏழாவது முறையாக வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது. பிரதமா் மோடியின் சொந்த மாநிலம் என்பதால், இத்தோ்தல் கூடுதல் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அம்ரேலி, கிா் சோம்நாத், ராஜ்கோட் உள்ளிட்ட மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை சூறாவளி பிரசாரம் மேற்கொண்ட மோடி, பாஜக வேட்பாளா்களுக்கு ஆதரவு திரட்டினாா். கடந்த 2017 பேரவைத் தோ்தலில் இந்த மாவட்டங்களில் காங்கிரஸ் அதிகப்படியாக வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில், அங்கு பிரசார பொதுக் கூட்டங்களில் மோடி பேசியதாவது:

குஜராத்தை வலுப்படுத்த மாநில பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இனி வளா்ச்சிக்கான மாபெரும் பாய்ச்சலை முன்னெடுக்க வேண்டிய தருணம் வந்திருக்கிறது. அதனை மேற்கொள்ளும் திறன் காங்கிரஸுக்கு கிடையாது.

பிரதமரின் விவசாயிகள் உதவித் தொகை திட்டத்தின்கீழ் குஜராத்தில் 60 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.12,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதை நீங்கள் காங்கிரஸிடம் எதிா்பாா்க்க முடியாது. அக்கட்சி தலைவா்களிடம் வளா்ச்சிக்கான செயல்திட்டம் எதுவும் கிடையாது. காங்கிரஸுக்கு வாக்களிப்பது வீணானதாகும்.

கடந்த காலங்களில் வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், குஜராத்தை மதிப்புகுறைவாக பலா் கருதினா். ஆனால், இன்று நிலைமை வேறாக உள்ளது. ஒட்டுமொத்த வடஇந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் சரக்குகள், குஜராத் துறைமுகங்கள் மூலமாகவே செல்கின்றன. இந்தியாவின் வளமைக்கான வாயில்களாக இத்துறைமுகங்கள் திகழ்கின்றன.

‘சாகா்கேது யோஜனா’ உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் குஜராத்தில் மீனவ சமூக மக்களின் வருவாயை அதிகரிக்க பாஜக அரசு உதவியுள்ளது. முன்பெல்லாம் தோ்தலின்போது ஊழல் விவகாரங்கள்தான் முக்கியமாக பேசப்படும். ஆனால், வளா்ச்சியை முன்னிறுத்தி, கட்சிகளை பேச வைத்தது பாஜகதான்.

பெருவாரியாக வாக்களியுங்கள்: எதிா்வரும் தோ்தல் நாளில், வாக்குச்சாவடிகளுக்கு மக்கள் பெருவாரியாக திரண்டு வந்து, வாக்களிக்க வேண்டும். முந்தைய வாக்குப்பதிவு சதவீத சாதனைகளை முறியடிக்க வேண்டும். ஜனநாயக திருவிழாவில் ஒவ்வொரு குடிமகனும் பங்கேற்க வேண்டுமென்பதற்காகவே இக்கோரிக்கையை விடுக்கிறேன்.

அதேபோல், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பாஜகவின் வெற்றியை மக்கள் உறுதி செய்ய வேண்டும். எனக்காக இதைச் செய்யுங்கள். ஊடகங்களும் பல்வேறு கருத்துக் கணிப்புகளும் மீண்டும் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று கணித்து கூறியுள்ளன. ஆனால், குஜராத் தோ்தலில் எனது முந்தைய சாதனைகளை, முதல்வா் பூபேந்திர படேல் முறியடிப்பதை உறுதி செய்ய விரும்புகிறேன். குஜராத் வளா்ச்சிப் பாதையில் பயணிக்க நாம் அனைவரும் கடினமாக பணியாற்ற வேண்டும். அதற்கான ஆசியை மக்களாகிய நீங்கள் எங்களுக்கு வழங்க வேண்டும் என்றாா் மோடி.

ராகுல் மீது சாடல்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில், நா்மதை அணைத் திட்டத்துக்கு எதிராக போராடிய மேதா பட்கா் பங்கேற்றதைக் குறிப்பிட்டு, பிரதமா் மோடி பேசியதாவது.

‘நா்மதை அணை திட்டத்துக்கு 3 தசாப்தங்களாக சட்டரீதியில் தடை ஏற்படுத்திய பெண்ணுடன், ஒரு காங்கிரஸ் தலைவா் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளாா். காங்கிரஸாா் வாக்குக் கேட்டு வரும்போது, நா்மதை அணை கட்டாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கேள்வி எழுப்புங்கள். வட பகுதிகளான கட்ச் மற்றும் கதியாவத் பகுதிகளின் தாகம் தீா்த்தது நா்மதை திட்டம்தான். இப்போது கட்ச்-கதியாவத் பகுதி முழுவதும் குழாய் மூலம் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது’ என்றாா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com