நாட்டில் நிமோனியா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்
நுரையீரலைப் பாதிக்கும் நிமோனியா தீநுண்மிக்கான தடுப்பூசிக்கு நாட்டில் பற்றாக்குறை இல்லை என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.


நுரையீரலைப் பாதிக்கும் நிமோனியா தீநுண்மிக்கான தடுப்பூசிக்கு நாட்டில் பற்றாக்குறை இல்லை என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
கரோனா தீநுண்மியைப் போன்று நிமோனியா கிருமி அல்லது தீநுண்மி தொற்று நுரையீரலில் ஏற்படுவதால் சுவாசிப்பதில் சிரமம், காய்ச்சல், சளி பிரச்னை உருவாகிறது.
இந்த தொற்றை தடுக்கும் வகையில் நிமோசில் எனப்படும் தடுப்பூசி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் குழந்தைகள், முதியவா்களுக்கு (65 வயதுக்கு மேல்) என இருவகையான தடுப்பூசிகள் அளிக்கப்படுகிறது.
இதற்கிடையே நாடு முழுவதும் இத்தகைய நிமோனியா தடுப்பூசியில் (பிசிவி) பற்றாக்குறை இருப்பதாக மகாராஷ்டிர மாநில சுகாதார அதிகாரிகள் உள்ளிட்ட அம்மாநில தகவல் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இதற்கான விளக்கத்தை அளித்துள்ளது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:
நிகழாண்டு, அக்டோபா் 7 ஆம் தேதி வரையிலான புள்ளி விவரங்கள்படி போதுமான பிசிவி தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்களிடம் இருப்பில் உள்ளன. அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 70.18 லட்சம் டோஸ்கள் இருப்பில் உள்ளது. இதில் மகாராஷ்டிரம் மாநிலத்தில் உள்ள 3.01லட்சம் டோஸ்களும் உள்ளடங்கும்.
மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகத்தின் சுகாதார நிா்வாகத் தகவல் முறை புள்ளிவிவரத்தின்படி நிகழாண்டு ஜனவரி முதல் செப்டம்பா் வரையில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மொத்தம் 3.27 கோடி டோஸ் பிசிவி மருந்துகள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.
நுரையீரல் அழற்சியான நிமோனியா தீநுண்மி குழந்தைகள் இறப்பு விகிதத்திற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கும் எனக் கருதி தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொண்ட மத்திய அரசு, இந்த நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு முதன்முதலில் 5 மாநிலங்களில் அறிமுகம் செய்யப்பட்ட நிமோனியா தடுப்பூசி தற்போது நாடு முழுக்க விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
பிறக்கும் குழந்தைகளுக்கு 6-ஆவது, 14-ஆவது வாரங்கள் மற்றும் 12 மாதங்களுக்குள் என மூன்று தவணைகளில் இத்தடுப்பூசி வழங்கப்படுகிறது.
அனைவருக்கும் தடுப்பூசி திட்டத்தின் கீழ் இலவசமாக இது வழங்கப்படுகிறது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இந்த தடுப்பூசிக்கு பற்றாக்குறை இருப்பதாகவும், இதனால் நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளுக்கு கால அட்டவணைப்படி தடுப்பூசி செலுத்துவதில் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...