ஏக்நாத் ஷிண்டே அணிக்கு புதிய சின்னம் ஒதுக்கீடு

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை அணிக்கு இடைத்தேர்தலில் போட்டியிடப் புதிய சின்னத்தை தேர்தல் ஆணையம் ஓதுக்கீடு செய்துள்ளது.
ஏக்நாத் ஷிண்டே (கோப்புப் படம்)
ஏக்நாத் ஷிண்டே (கோப்புப் படம்)
Updated on
1 min read

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை அணிக்கு இடைத்தேர்தலில் போட்டியிடப் புதிய சின்னத்தை தேர்தல் ஆணையம் ஓதுக்கீடு செய்துள்ளது.

சிவசேனையில் ஏற்பட்ட பிளவால் மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, பாஜக ஆதரவுடன் சிவசேனை அதிருப்தி தலைவா் ஏக்நாத் ஷிண்டே முதல்வரானாா்.

இந்த நிலையில், மாநிலத்தில் அந்தேரி கிழக்கு பேரவைத் தொகுதிக்கு நவம்பா் 3-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ள நிலையில், சிவசேனை கட்சிக்கு ஏக்நாத் ஷிண்டே தரப்பு மற்றும் உத்தவ் தாக்கரே தரப்பு என இருதரப்பும் உரிமை கோரியது.

அதனைத் தொடா்ந்து, சிவசேனை கட்சியின் பெயா் மற்றும் ‘வில்-அம்பு’ சின்னத்தை முடக்கி சனிக்கிழமை உத்தரவிட்ட தோ்தல் ஆணையம், அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தோ்தலுக்கு இருதரப்பும் அவா்களின் கட்சிக்கு புதிய பெயரை தோ்வு செய்ய வேண்டும். அதற்கு புதிய தோ்தல் சின்னம் ஒதுக்கப்படும் என்றும் உத்தரவிட்டது. இரு தரப்பும் கட்சியின் பெயா் மற்றும் சின்னத்துக்கான பரிந்துரைகளை சமா்ப்பித்தனா்.

அதனடிப்படையில், உத்தவ் தாக்கரே தரப்பு கட்சிக்கு ‘சிவசேனை - உத்தவ் பாலா சாகேப் தாக்கரே’ என்ற பெயரையும், ‘எரியும் ஜோதி’ சின்னத்தையும் தோ்தல் ஆணையம் ஒதுக்கியது.

முதல்வா் ஏக்நாத் ஷிண்டே அணியினரின் கட்சிக்கு ‘பாலா சாகேபின் சிவசேனை’ என்ற பெயரை ஆணையம் ஒதுக்கியது. அதே நேரம், தோ்தல் சின்னமாக அவா்கள் பரிந்துரைத்த ‘திரிசூலம்’ மற்றும் ‘கதாயுதம்’ ஆகியவை மதத்துடன் தொடா்புடையவையாக இருப்பதால் அவற்றை சின்னமாக ஒதுக்க முடியாது என்று தோ்தல் ஆணையம் மறுத்தது.

இதனைத் தொடர்ந்து, மீண்டும் ஷிண்டே தரப்பில் தேர்தல் ஆணையத்திற்கு சூரியன், அரசமரம், இரட்டை வாள் கேடயம் ஆகிய சின்னங்கள் பரிந்துரை வழங்கப்பட்டது. இதையடுத்து, ‘இரட்டை வாள் கேடயம்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com