விவசாயிகளுக்கு 12வது தவணையாக ரூ.16,000 கோடி பிஎம் கிசான் நிதி விடுவிப்பு!

விவசாயிகளுக்கு 12 ஆவது தவணை தொகையான ரூ.16 ஆயிரம் கோடியை நேரடி பலன் பரிமாற்றம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை விடுவித்தார்.
விவசாயிகளுக்கு 12வது தவணையாக ரூ.16,000 கோடி பிஎம் கிசான் நிதி விடுவிப்பு!


புதுதில்லி: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் 12 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு 12 ஆவது தவணை தொகையான ரூ.16 ஆயிரம் கோடியை நேரடி பலன் பரிமாற்றம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை விடுவித்தார்.

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. 3 தவணைகளில் தலா ரூ. 2 ஆயிரம் வீதம் இந்த நிதி உதவி விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாய குடும்பங்களுக்கு இதுவரை ரூ. 2 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புது தில்லியில் உள்ள பூசாவில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில்(ஐஏஆர்ஐ) பிரதமர் கிசான் சம்மான் சம்மேளன் 2022 என்ற இரண்டு நாள் நிகழ்வை திங்கள்கிழமை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது, பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் 12 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு 12 ஆவது தவணை நிதியாக ரூ.16 ஆயிரம் கோடியை விடுவித்தார். 

பின்னர் அவர் பேசியதாவது: பிரதம மந்திரி கிசான் விவசாயிகளுக்கான ஒரு மாற்றும் முயற்சியாகும். இன்றைய நிகழ்வானது விவசாயிகள், வேளாண் தொடக்க நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களை ஒரே தளத்தில் ஒன்றிணைத்துள்ளது.

விவசாயிகளுக்கு அறுவடையை அதிகரிக்கவும், மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், விவசாய மகசூலை  மேம்படுத்துவதற்கு எளிதாகப் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பத்தை உருவாக்கவும் நாட்டில் உள்ள வேளாண் தொடக்க நிறுவனங்கள் செயல்படுகின்றன. தொழில்நுட்பம் சார்ந்த நவீன விவசாய உத்திகளைக் கடைப்பிடிப்பது காலத்தின் தேவை என்று மோடி கூறினார். 

மேலும், 22 கோடிக்கும் அதிகமான மண்வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன, இதனால் விவசாயிகள் தங்கள் நிலம் மற்றும் அறுவடை பற்றிய தகவல்களை தயார் நிலையில் வைத்திருக்க முடியும்.

யூரியா உற்பத்தியில் சுயசார்பை நோக்கி இந்தியா செயல்பட்டு, திரவ நானோ யூரியாவை நோக்கி நகர்கிறது. விவசாயத் துறைக்கு இது ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும். நானோ யூரியா விவசாய நோக்கங்களுக்காக செலவு குறைந்த ஊடகமாக உருவாகும். திங்கள்கிழமை(அக்.17) முதல், பாரத் என்ற ஒற்றை பிராண்டின் கீழ் யூரியா பரவலாக விற்பனை செய்யப்படும் என்றார்.

ஒரு சொட்டு அதிக பயிர் திட்டத்தின் கீழ், சொட்டு நீர் பாசனத்திற்கும், தெளிப்பான்களின் பயன்பாட்டிற்கும் அரசாங்கம் முக்கியத்துவம் அளித்து வருகிறது. இம்முயற்சி நீரைச் சேமிக்கவும், மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்றார். 

தொழில்நுட்பம் சார்ந்த முன்முயற்சிகளைப் பயன்படுத்தி, பண்ணைகளுக்கும் சந்தைக்கும் இடையிலான தூரத்தை அரசாங்கம் குறைத்துள்ளது.

கிசான் ரயில் மற்றும் கிரிஷி உடான் மூலம், விவசாயிகள் பெருநகரங்களுடன் மட்டுமின்றி சர்வதேச சந்தைகளுடனும் இணைக்கப்பட்டு, விவசாய ஏற்றுமதியில் அதிகரிப்புக்கு வழிவகுத்தது.

வெளிநாட்டு இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய மோடி, உயிரி எரிபொருள் எத்தனாலுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் எத்தனால் உற்பத்தியானது நிலையான வாகன எரிபொருளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். விவசாயத் துறையில் சிறந்த தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை வழங்குவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக மோடி கூறினார்.

இந்நிகழ்ச்சியில், மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் 600 பிரதான் மந்திரி கிசான் சம்ருத்தி மையங்களையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். 

இந்தத் திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள சில்லறை உர விற்பனை கடைகள் படிப்படியாக பிரதான் மந்திரி கிசான் சம்ருத்தி மையங்களாக மாற்றப்படும். இந்த மையங்கள் விவசாயிகளின் பல்வேறு வகையான தேவைகளை பூர்த்தி செய்து, வேளாண் இடுபொருள்கள், மண், விதைகள் மற்றும் உரங்களுக்கான பரிசோதனை வசதிகள் மற்றும் விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும். பல்வேறு அரசு திட்டங்கள் குறித்த தகவல்கள் முதலியவற்றை இந்த மையங்கள் வழங்குவதோடு வட்டார மற்றும் மாவட்ட அளவிலான சில்லறை வணிகர்களின் திறன் கட்டமைப்பையும் உறுதி செய்யும். சுமார் 3.3 லட்சத்துக்கும் மேற்பட்ட சில்லறை உரக்கடைகளை பிரதான் மந்திரி கிசான் சம்ருத்தி மையங்களாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com