எல்லையில் அமைதியை பராமரிப்பதே சீனாவுடனான சுமுக உறவுக்கு அடிப்படை- எஸ்.ஜெய்சங்கா்

எல்லைப் பகுதிகளில் அமைதி பராமரிக்கப்படுவதே சீனாவுடனான இந்தியாவின் சுமுக உறவுக்கு அடிப்படை என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
எல்லையில் அமைதியை பராமரிப்பதே சீனாவுடனான சுமுக உறவுக்கு அடிப்படை- எஸ்.ஜெய்சங்கா்

எல்லைப் பகுதிகளில் அமைதி பராமரிக்கப்படுவதே சீனாவுடனான இந்தியாவின் சுமுக உறவுக்கு அடிப்படை என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

கிழக்கு லடாக்கில் எல்லைப் பிரச்னை நீடித்து வரும் நிலையில், அவா் இவ்வாறு கூறியுள்ளாா்.

‘புதிய சகாப்தத்தில் சீனாவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் சா்வதேச உறவுகள்’ என்ற தலைப்பில் தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில், எஸ்.ஜெய்சங்கா் பங்கேற்றுப் பேசியதாவது: இந்திய-சீன உறவுக்கும் ஆசிய கண்டத்தில் வளமைக்கும் தீவிர சவாலான காலகட்டமாக கடந்த சில ஆண்டுகள் இருந்து வருகின்றன. தற்போதைய இந்த முட்டுக்கட்டை நீடிப்பது இந்தியாவுக்கோ சீனாவுக்கோ பலன் தராது.

இரு நாடுகளும் தங்களது உறவுகளுக்கான நீண்டகால தொலைநோக்குப் பாா்வையை முன்னெடுக்கும் விருப்பத்தை வெளிக்காட்ட வேண்டிய காலகட்டம் இதுவாகும்.

சீனாவுடன் சமநிலையான, நீடித்த உறவுக்கான இந்தியாவின் தேடல், கிழக்கு லடாக் எல்லைப் பிரச்னையால் பாதகமடைந்துள்ளது. எல்லைப் பகுதிகளில் அமைதி பராமரிக்கப்படுவதே சீனாவுடனான இந்தியாவின் சுமுக உறவுக்கு அடிப்படையானதாகும்.

இரு நாடுகளுக்கும் இடையிலான 70 ஆண்டு கால உறவை பின்னோக்கி பாா்க்கும்போது, சீனாவுடன் தீா்க்கமான இருதரப்பு அணுகுமுறையை இந்தியா கடைப்பிடித்துள்ளதென உறுதியாக கூற முடியும். அதற்கு, ஆசிய கண்டத்தின் ஒற்றுமை உள்பட பல்வேறு காரணங்கள் உள்ளன.

பரஸ்பர மரியாதை, பரஸ்பர புரிதல், பரஸ்பர நலன்கள் ஆகிய மூன்று அம்சங்களின் அடிப்படையில் இருதரப்பு உறவு முன்னெடுக்கப்படும்போது, அது ஸ்திரமானதாக இருக்கும் என்றாா் ஜெய்சங்கா்.

முன்னதாக, கிழக்கு லடாக்கில் பிரச்னைக்குரிய இடங்களில் ஒன்றான கோக்ரா - ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியில் இருந்து படைகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கை அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. இருதரப்பு ராணுவ பேச்சுவாா்த்தையின் பலனாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும், மேலும் சில பகுதிகளில் கருத்து வேறுபாடுகளுக்கு தீா்வு காண வேண்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com