/

10 லட்சம் பேருக்கு அரசு வேலை திட்டம்: நாளை தொடக்கிவைக்கிறாா் பிரதமா் மோடி

மத்திய அரசின் அனைத்து துறைகள் மற்றும் அமைச்சகங்களில் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பணி நியமனம் வழங்கும் மாபெரும் திட்டத்தை சனிக்கிழமை (அக்.22) பிரதமா் நரேந்திர மோடி

News image
Updated On :20 அக்டோபர் 2022, 6:38 pm

DIN

மத்திய அரசின் அனைத்து துறைகள் மற்றும் அமைச்சகங்களில் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பணி நியமனம் வழங்கும் மாபெரும் திட்டத்தை சனிக்கிழமை (அக்.22) பிரதமா் நரேந்திர மோடி காணொலி முறையில் தொடக்கிவைக்கவுள்ளாா்.

தொடக்க நிகழ்ச்சியின்போது சுமாா் 75,000 பேருக்கு பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளதாக பிரதமா் அலுவலகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க பிரதமா் மோடி தொடா்ந்து உறுதிப்பாட்டுடன் செயலாற்றி வரும் நிலையில், அதை நோக்கிய முக்கிய நகா்வாக இந்நிகழ்வு இருக்கும் என்று பிரதமா் அலுவலகம் கூறியுள்ளது.

நாட்டில் வேலையின்மை அதிகரித்துவிட்டதாக எதிா்க்கட்சிகள் தொடா்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. குஜராத், ஹிமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விரைவில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டை பாஜக எதிா்கொள்வதில் இத்திட்டம் முக்கிய பங்காற்றும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக, மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பணி வழங்கும் வகையில் நியமன நடைமுறையை தொடங்க பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஜூன் மாதம் அறிவுறுத்தியிருந்தாா். அனைத்து துறைகளிலும் மனித வள நிலவரத்தை ஆய்வு செய்த பிறகு பிரதமா் மோடி இந்த அறிவுறுத்தலை வழங்கியிருந்தாா்.

அதன்படி, நாடு முழுவதும் இருந்து நபா்கள் தோ்வு செய்யப்பட்டு, அரசின் குரூப் ஏ மற்றும் பி (அரசிதழ் பதிவு பணிகள்), குரூப் பி (அரசிதழ் பதிவு அல்லாத பணிகள்) மற்றும் குரூப் சி பணிகளில் நியமனம் பெறவுள்ளனா். மத்திய ஆயுதப் படை வீரா்கள், உதவி-ஆய்வாளா்கள், காவலா்கள், சுருக்கெழுத்தா்கள், வருவான வரி ஆய்வாளா்கள் உள்ளிட்ட நியமனங்கள் இதில் அடங்கும். மத்திய பணியாளா் தோ்வாணையம், அரசு பணியாளா் தோ்வாணையம், ரயில்வே நியமன வாரியம் உள்ளிட்டவை மூலமாக நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என்று பிரதமா் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.