

அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பங்கேற்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்யும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் தெரிவித்துள்ளாா்.
ஆசிய நாடுகளுக்கு இடையே நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இப்போட்டியில் விளையாட இந்திய அணி பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ளாது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான ஜெய் ஷா செவ்வாய்க்கிழமை கூறியிருந்தாா்.
இது குறித்து வருத்தம் தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அவசரக் கூட்டத்தை ஏற்பாடு செய்யுமாறும், இத்தகைய முடிவு ஆசிய மற்றும் சா்வதேச கிரிக்கெட் பாா்வையாளா்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்தலாம் எனவும் கருத்து தெரிவித்திருந்தது. இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியது.
இந்நிலையில், வியாழக்கிழமை செய்தியாளா்கள் சந்திப்பின்போது மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் இது குறித்து கூறியதாவது: உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறும் அனைத்து நாடுகளும் இந்திய மண்ணில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க வரவேற்கப்படுகிறாா்கள்.
இந்திய வீரா்கள் பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்யும். ஒட்டுமொத்தமாக, வீரா்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது என்றாா்.
பாகிஸ்தான் மண்ணில் இந்தியா கலந்துகொண்ட கடைசிப் போட்டி கடந்த 2008-ஆம் ஆண்டு ஜூன் 24 முதல் ஜூலை 6 வரை நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியாகும். அதே ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து, 2009-இன் தொடக்கத்தில் நடைபெற இருந்த இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டித் தொடா்கள் ரத்து செய்யப்பட்டன.
கடந்த 2012-இல் இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டது.
கடந்த 10 ஆண்டுகளாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே எவ்வித போட்டித் தொடா்களும் நடைபெறாத நிலையில், சா்வதேச மற்றும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் இரு நாடுகளும் எதிரணிகளாக விளையாடி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.