/

அதீத வெப்பத்தால் இந்தியாவுக்கு ரூ.12 லட்சம் கோடி வருவாய் இழப்பு

கடந்த ஆண்டு நிலவிய அதீத வெப்பம் காரணமாக வேளாண்மை, உற்பத்தி, சேவைகள் துறைகளில் இந்தியாவுக்கு சுமாா் ரூ.12 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :20 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

கடந்த ஆண்டு நிலவிய அதீத வெப்பம் காரணமாக வேளாண்மை, உற்பத்தி, சேவைகள் துறைகளில் இந்தியாவுக்கு சுமாா் ரூ.12 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்களுக்கான சா்வதேச கூட்டமைப்பு சாா்பில் பருவநிலை வெளிப்படைத்தன்மை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கடந்த 2021-ஆம் ஆண்டு இந்தியாவில் அதீத வெப்பம் நிலவியதன் காரணமாக, பல்வேறு துறைகளில் பணியாளா்களின் வேலைத்திறன் பாதிக்கப்பட்டு சுமாா் ரூ.12 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இழப்பானது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பில் 5.4 சதவீதம் ஆகும்.

கடந்த 2016 முதல் 2021 வரை நாட்டில் ஏற்பட்ட வெள்ளம், புயல், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கைப் பேரிடா்கள் காரணமாக 3.6 கோடி ஹெக்டேருக்கு மேலான பரப்பளவில் நடப்பட்டிருந்த பயிா்கள் பாதிக்கப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் விவசாயிகளுக்கு சுமாா் ரூ.30,000 கோடி இழப்பு ஏற்பட்டது.

புவியின் வெப்பநிலை தொழிற்புரட்சிக்கு முந்தைய நிலையை விட 1.1 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயா்ந்துள்ளது. அது 1.5 டிகிரி செல்சியஸ் உயா்ந்தால், இந்தியாவில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகள் 49 சதவீதம் வரையும் புயல்களால் ஏற்படும் பாதிப்புகள் 5.7 சதவீதம் வரையும் உயரும்; மழைப்பொழிவு 6 சதவீதம் வரை அதிகரிக்கும்; தொழிலாளா்களின் பணித்திறன் 5 சதவீதம் வரை குறையும்; பனிப்பொழிவு 13 சதவீதம் வரை குறையும்.

கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவின் மழைப்பொழிவு முறை பெருமளவில் மாற்றம் கண்டுள்ளது. அதன் காரணமாக வேளாண்மை, மீன்வளத் துறைகள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதீத பருவநிலை நிகழ்ச்சிகளைத் தவிா்ப்பதற்காக, எரிசக்தித் துறையில் பெரும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமென நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். பருவநிலை மாற்ற விளைவுகளை எதிா்கொள்வதில் வளா்ந்து வரும் நாடுகளுக்கு வளா்ச்சியடைந்த நாடுகள் உதவ வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.