அந்தமான்-நிகோபார் முன்னாள் தலைமைச் செயலருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகள்

அந்தமான் - நிகோபார் தீவுகளின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜிதேந்திர நரைன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டை விசாரித்த காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்துள்ளன.
அந்தமான்-நிகோபார் முன்னாள் தலைமைச் செயலருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகள்
அந்தமான்-நிகோபார் முன்னாள் தலைமைச் செயலருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகள்


சென்னை: அந்தமான் - நிகோபார் தீவுகளின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜிதேந்திர நரைன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டை விசாரித்த காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்துள்ளன.

ஜிதேந்திர நரைனும், தொழிலாளர் துறை ஆணையாளர் ரிஷி என்பவரும் இணைந்து அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20க்கும் மேற்பட்ட பெண்களை, நரைன் வீட்டில் பாலியல் பலாத்காரம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சில பெண்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருப்பதும் தெரிய வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம், 20 வயது பெண் ஒருவர், முன்னாள் தலைமைச் செயலாளர் ஜிதேந்திர நரைன் மற்றும் ஆர்எல் ரிஷி ஆகியோர், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்ததைத் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தனக்கு தெரிந்தவர் மூலம் ரிஷி அறிமுகமானார் என்றும், ரிஷி தான், தன்னை நரைன் வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகவும் அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார். தனக்கு மது கொடுத்து, இருவரும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

புகார் அளித்த பெண் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்களின் தொலைபேசி அழைப்புகள் பதிவானதன் அடிப்படையில், பெண் கூறியது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதாவது, மூன்று பேரின் செல்லிடப்பேசிகளும் ஒரே டவரில் இருந்து இயங்கியிருப்பதும், அவர் சொல்லும் குற்றச்சாட்டு நேரமும் சரியாக இருக்கிறது என்று காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து முதன்மைச் செயலாளரை பணியிடை நீக்கம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.  அதன்பிறகு, பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான செய்திகள் வெளியே வந்தன.

அக்டோபர் 28ஆம் தேதி, சிறப்பு விசாரணைக் குழு முன்பு, நரைன் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு பொய்யானது என்பதை தான் நிரூபிப்பேன் என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு நரைன் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அக்டோபர் 17ஆம் தேதி நரைன் பொறுப்பிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நவம்பர் 14ஆம் தேதி வரை அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அவருடன் ரிஷியும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com