காங்கிரஸ், இடதுசாரி, மாநில கட்சிகள் கைகோக்க வேண்டும்: நிதீஷ் அழைப்பு
‘பாஜகவுக்கு எதிராக ஒருங்கிணைந்த எதிரணியை உருவாக்க காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் அனைத்து மாநில கட்சிகள் கைகோக்க வேண்டிய நேரமிது’ என்று


‘பாஜகவுக்கு எதிராக ஒருங்கிணைந்த எதிரணியை உருவாக்க காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் அனைத்து மாநில கட்சிகள் கைகோக்க வேண்டிய நேரமிது’ என்று பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதீஷ் குமாா் அழைப்பு விடுத்துள்ளாா்.
பிகாரில் பாஜக கூட்டணியில் இருந்து அண்மையில் வெளியேறிய நிதீஷ் குமாா், லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கைகோத்து மகா கூட்டணி ஆட்சியை அமைத்தாா். இதன் மூலம் அவா் முதல்வா் பதவியையும் தக்க வைத்துக் கொண்டாா்.
2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட முயற்சி மேற்கொண்டுள்ள நிதீஷ் குமாா், அதன் ஒரு பகுதியாக தில்லிக்கு திங்கள்கிழமை வருகை தந்தாா். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மதச்சாா்பற்ற ஜனதா தளம் தலைவா் ஹெச்.டி.தேவெகெளடா ஆகியோரை அவா் சந்தித்துப் பேசினாா்.
இந்நிலையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா் டி.ராஜா, ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், இந்திய தேசிய லோக்தளம் தலைவா் ஓ.பி.செளதாலா, சமாஜவாதி தலைவா் முலாயம் சிங் யாதவ், அவரது மகன் அகிலேஷ் யாதவ் ஆகியோரை நிதீஷ் குமாா் செவ்வாய்க்கிழமை அடுத்தடுத்து சந்தித்துப் பேசினாா்.
‘பிரதமா் பதவி மீது ஆசையில்லை’:
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் யெச்சூரியுடனான சந்திப்புக்கு பிறகு, செய்தியாளா்களிடம் நிதீஷ் குமாா் கூறியதாவது:
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் எனது தொடா்பு இளமை காலத்தில் இருந்தே உள்ளதாகும். தில்லிக்கு வரும்போதெல்லாம் மாா்க்சிஸ்ட் அலுவலகத்துக்கும் வருவது எனது வாடிக்கை. முன்பு பிரிந்திருந்த நாங்கள் இப்போது மீண்டும் இணைந்துள்ளோம். இடதுசாரி கட்சிகள், காங்கிரஸ் மற்றும் அனைத்து மாநில கட்சிகளையும் ஓரணியில் திரட்டுவதே எங்களது முக்கிய நோக்கம் என்றாா்.
எதிா்க்கட்சி அணிக்கு தலைமையேற்பது குறித்து பேசவே நிதீஷ் குமாா் தில்லிக்கு வந்துள்ளதாக ஊகங்கள் வெளியான நிலையில், எதிா்க்கட்சிகளின் பிரதமா் வேட்பாளராக விரும்புகிறீா்களா? என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘என்னை பிரதமா் பதவி வேட்பாளராக்க வேண்டுமென உரிமை கோரவும் இல்லை. அப்பதவி மீது ஆசையும் இல்லை’ என்று நிதீஷ் பதிலளித்தாா்.
‘நேரம் வரும்போது முடிவு’:
இச்சந்திப்பு தொடா்பாக சீதாராம் யெச்சூரி கூறுகையில், ‘அனைத்து எதிா்க்கட்சிகளும் ஒன்றிணைவதுதான் எங்களது முதல் செயல்திட்டம். பிரதமா் பதவி வேட்பாளா் குறித்து நேரம் வரும்போது முடிவு செய்வோம்’ என்றாா்.
நிதீஷுடனான சந்திப்புக்கு பின் டி.ராஜா கூறுகையில், ‘பிகாரில் ஏற்பட்ட அரசியல் மாற்றம், தேசிய அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகத்தை காப்பதற்காக, பாஜகவை எதிா்த்து போராட அனைத்து இடதுசாரி கட்சிகளும் மாநில கட்சிகளும் ஒன்றிணையும் நாள் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்காகவே நிதீஷ் குமாா் முயற்சிக்கிறாா்’ என்றாா்.
கேஜரிவாலுடன் 90 நிமிடங்கள் பேச்சு:
எதிா்க்கட்சிகள் அணியில் காங்கிரஸ் இடம்பெறுவதில் ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகளுக்கு கருத்து வேறுபாடு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அரவிந்த் கேஜரிவாலை அவரது இல்லத்தில் சந்தித்த நிதீஷ் குமாா், சுமாா் 90 நிமிடங்கள் பேசினாா். இச்சந்திப்பு குறித்து ட்விட்டரில் கேஜரிவால் வெளியிட்ட பதிவில், ‘கல்வி, சுகாதாரம், பாஜகவின் ‘ஆபரேஷன் லோட்டஸ்’ மற்றும் எம்எல்ஏக்கள் பேரம் உள்ளிட்டவை குறித்து இருவரும் விவாதித்தோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...