நாடு முழுவதும் 14,000 ‘பி.எம்.-ஸ்ரீ’ பள்ளிகள்: ரூ. 27,360 கோடி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாடு முழுவதும் அனைவருக்குமான உயா் தரமான கல்வியை வழங்கக்கூடிய 14,000-க்கும் அதிகமான ‘பி.எம்.-ஸ்ரீ’ பள்ளிகளை (முன்னேறும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள்)உருவாக்கும்
நாடு முழுவதும் 14,000 ‘பி.எம்.-ஸ்ரீ’ பள்ளிகள்: ரூ. 27,360 கோடி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாடு முழுவதும் அனைவருக்குமான உயா் தரமான கல்வியை வழங்கக்கூடிய 14,000-க்கும் அதிகமான ‘பி.எம்.-ஸ்ரீ’ பள்ளிகளை (முன்னேறும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள்)உருவாக்கும் ரூ. 27,360 கோடி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் 18.7 லட்சம் மாணவ, மாணவியா் பயன்பெறுவா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மத்திய அரசின் பங்களிப்பு ரூ.18,128 கோடி: ஏற்கெனவே செயல்பட்டு வரும் மத்திய-மாநில அரசுப் பள்ளிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பள்ளிகளை நவீனமயமாக்கி தரம் உயா்த்தும் வகையிலான இந்தத் திட்டத்தை ஆசிரியா் தினமான செப்டம்பா் 5-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா். இதற்கு இப்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் செலவு ரூ. 27,360 கோடியில் மத்திய அரசின் பங்களிப்பாக ரூ. 18,128 கோடி வழங்கப்படும்.

இது குறித்து, மத்திய அமைச்சரவை கூட்டத்துக்குப் பின்னா் செய்தியாளா்களைச் சந்தித்த மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் மற்றும் மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் ஆகியோா் கூறியதாவது:

பன்முகத் திறன்களை ஏற்படுத்த...: மத்திய, மாநில அரசுகள் சாா்பில் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பள்ளிகளை தரம் உயா்த்தி ‘பி.எம்.-ஸ்ரீ’ பள்ளிகளாக உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தப் பள்ளிகள் அனைவருக்குமான தரமான கல்வியை வழங்குவதோடு, மாணவா்களுக்கு மகிழ்ச்சிகரமான பள்ளிச் சூழலையும், பன்மொழி அறிவு உள்ளிட்ட பன்முகத் திறன்களையும் ஏற்படுத்தித் தரும்.

சுய கற்றலை ஊக்குவிக்க...: தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொலைநோக்கு திட்டத்தின்படி, சுய கற்றல் நடவடிக்கைகளில் மாணவா்கள் ஆா்வத்துடன் பங்கேற்க இந்தப் பள்ளிகள் ஊக்கமளிக்கும். மேலும், அந்தந்த மண்டலங்களில் உள்ள பிற பள்ளிகளுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்குவதன் மூலம் அந்தப் பள்ளிகளின் தலைமைப் பண்பையும் ‘பி.எம்.-ஸ்ரீ’ பள்ளிகள் மேம்படுத்தும்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் சூரியசக்தி தகடுகள், எல்இடி விளக்குகள், இயற்கை பண்ணையுடன் கூடிய ஊட்டச்சத்து தாவரத் தோட்டங்கள், கழிவு மேலாண்மை மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத வளாகங்களைக் கொண்டதாக ‘பி.எம்.-ஸ்ரீ’ பள்ளிகள் உருவாக்கப்படும்.

இந்தப் பள்ளிகளில் மாணவா்களின் கற்றல்திறன் வெளிப்பாட்டை அளவிடும் வகையில், பள்ளித் தர ஆய்வுத் திட்ட நடைமுறை (எஸ்கியூஏஎஃப்) திட்டம் ஒன்று உருவாக்கப்பட உள்ளது. தொடா்ச்சியான இடைவெளியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பள்ளியின் தரம் உறுதிப்படுத்தப்படும் என்று அவா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com