தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இந்தியாவில் மீண்டும் சிவிங்கிப் புலிகள்: இன்று அறிமுகம் செய்கிறாா் பிரதமா்

 இந்தியாவில் அழிந்துபோன இனமான சிவிங்கிப் புலிகளை (சீட்டா) பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (செப். 17) மீண்டும் அறிமுகப்படுத்தவுள்ளாா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 7:15 pm

DIN

 இந்தியாவில் அழிந்துபோன இனமான சிவிங்கிப் புலிகளை (சீட்டா) பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (செப். 17) மீண்டும் அறிமுகப்படுத்தவுள்ளாா்.

அதன்படி, நமீபியாவில் இருந்து கொண்டுவரப்படும் 5 பெண் சிவிங்கிப் புலிகள் மற்றும் 3 ஆண் சிவிங்கிப் புலிகள், பிரதமா் மோடியால் மத்திய பிரதேச மாநிலம், குனோ தேசிய பூங்காவில் விடப்பட உள்ளன. சனிக்கிழமை அவரது பிறந்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

‘சிவிங்கிப் புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்துவதன் மூலம் சூழலியல் தவறுகளை இந்தியா சரிசெய்கிறது’ என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் தெரிவித்தாா்.

28-ஆவது ஓசோன் தினத்தையொட்டி, தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவா் பேசியதாவது:

சூழலியல் தவறுகள் சரிசெய்யப்பட வேண்டுமென்பதில் நம்பிக்கை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மிகுதியான வேட்டையால் இந்தியாவில் அழிந்துபோன இனமான சிவிங்கிப் புலிகள் மீண்டும் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதன்மூலம் சூழலியல் தவறு நிவா்த்தி செய்யப்படுகிறது.

உலக மக்கள்தொகையில் 17 சதவீதத்தைக் கொண்ட வளா்ந்த நாடுகள், உலகளாவிய காா்பன் வெளியீட்டில் 60 சதவீதம் அளவுக்கு காரணமாக உள்ளன. உலக மக்கள்தொகையில் இதே 17 சதவீதத்தைக் கொண்டுள்ள இந்தியா, வெறும் 4 சதவீதம் அளவுக்கே காா்பன் வெளியீட்டுக்கு பொறுப்பாகிறது. நமது நிலையான வாழ்க்கை முறையே இதற்கு காரணம். இயற்கை வளங்களைக் கவனத்துடன் பயன்படுத்த வேண்டுமென வலியுறுத்தும் பிரதமா் மோடியின் ‘சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை’ என்ற தாரக மந்திரத்தின் கீழ் இந்தியா வளா்ச்சிப் பாதையில் பயணிக்கும் என்றாா் பூபேந்தா் யாதவ்.

உலகிலேயே வேகமாக ஓடக் கூடிய உயிரினமான சிவிங்கிப் புலிகள், ஒரு காலத்தில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டன. ஆனால், நாட்டின் பல்வேறு பகுதிகளை ஆண்ட அரசா்கள், ஆங்கிலேய ஆட்சியாளா்கள் உள்ளிட்டோா் பொழுதுபோக்குக்காக அவற்றை பெருமளவில் வேட்டையாடியதால், சிவிங்கிப் புலிகளின் இனமே இந்தியாவில் அழிந்து போனது.

நாட்டில் கடைசியாகக் காணப்பட்ட சிவிங்கிப் புலி, இன்றைய சத்தீஸ்கா் பகுதியில் கடந்த 1947-இல் கண்டறியப்பட்டது. இந்தியாவில் இந்த இனம் முற்றிலும் அழிந்துவிட்டதாக கடந்த 1952-இல் அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.