
பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியார்மயமாக்குவதால் இலங்கையின் தற்போதைய சூழ்நிலையை இந்தியாவும் எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
'நாடு முழுவதும் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், அரசு பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்து வருகிறது. இதனால் வரும் காலத்தில் இலங்கையைப் போன்ற ஒரு சூழ்நிலையை இந்தியாவும் எதிர்கொள்ளும் நிலை வரும் என்று நான் அஞ்சுகிறேன்' என்று மக்களவையில் பேசிய அவர் தெரிவித்தார்.
மேலும், 'மற்ற நாடுகளைப் போன்று இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு இல்லை' என்ற மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரியின் வாதம் குறித்து, 'இந்தியாவை மற்ற நாடுகளுடன் ஒப்பிடுவது சரியல்ல. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் மக்களின் வருமானத்தில் பெரிய வித்தியாசம் உள்ளது.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்தாலும், பெட்ரோல், டீசல் விலையை அரசு கட்டுப்படுத்தியது' என்றார்.
அதுபோல காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கும், 'இன்னும் எத்தனை நாள்களில் இந்தியாவின் நிலை இலங்கையைப்போல் இருக்கும் என்று தெரியவில்லை, ஆனால் இந்து மதம் ஆபத்தில் இருப்பதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.
இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 95 சதவீதத்தை கடனாக பெற்றுள்ளது. பிரதமர் மோடி, 83 சதவீதத்தை பெற்றுள்ளார். உலகத் தலைவராவதற்கு நாம் இன்னும் 13 படிகள் தொலைவில் மட்டுமே இருக்கிறோம்' என்று கிண்டலாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | இலங்கையில் அவசர நிலை வாபஸ்: அதிபர் அறிவிப்பு