உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் கல்வியைத் தொடர முடியுமா? வைகோ கேள்வி

உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் கல்வியைத் தொடர முடியுமா? நாடாளுமன்றத்தில் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் கல்வியைத் தொடர முடியுமா? வைகோ கேள்வி

உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் கல்வியைத் தொடர முடியுமா? நாடாளுமன்றத்தில் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

(அ) உக்ரைனில் போர் காரணமாக, மருத்துவக் கல்வியை தொடர முடியாமல், தாயகம் திரும்பிய மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க, இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்த்துக்கொள்ள வலியுறுத்தி தேசிய மருத்துவ ஆணையத்தின் முன் பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தில்லி வந்து போராட்டம் நடத்தினார்களா?

(ஆ) அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?

(இ) உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களின் சேர்க்கைக்காக எம்.பி.க்கள் மற்றும் பொது பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டதா? அப்படியெனில், அதன் விவரங்கள் மற்றும் அதற்கு என்ன பதில் தரப்பட்டது?

(ஈ) போர் காரணமாக உக்ரைனில் இருந்து வந்த மருத்துவ மாணவர்களுக்கு பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் மறுசேர்க்கை வழங்க அரசு மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் அதன் விவரங்கள் என்ன?

வைகோவின் கேள்விகளுக்கு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் அளித்த பதில்:-

(அ) முதல் (ஈ) வரை: உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களின் பிரச்னை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் பிரதிநிதிகள் மற்றும் மாணவர்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கு “திறன் தணிக்கை தேர்வு (Screening Test) விதிமுறைகள்- 2002” அல்லது “வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி உரிமம் விதிமுறைகள்- 2021” கீழ் வருகிறது. இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் 1956 மற்றும் தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019 இன் படி, வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து இந்திய மருத்துவக் கல்லூரிகளுக்கு மருத்துவ மாணவர்களை இடமாற்றம் செய்வதற்கான விதிமுறைகள் எதுவும் இல்லை. வெளிநாட்டு மருத்துவ மாணவர்களை இடமாற்றம் செய்ய இந்திய மருத்துவ ஆணையத்தால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.

இந்திய மருத்துவ ஆணையம் வகுத்துள்ள திட்டத்தின் கீழ், இளங்கலை மருத்துவப் படிப்பின் கடைசி ஆண்டில் (கரோனா பெருந்தொற்று, ரஷ்யா-உக்ரைன் மோதல் போன்றவை காரணமாக, வெளிநாட்டு மருத்துவ நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது) இந்திய மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்தனர். இதன்படி, அந்தந்த நிறுவனத்தால் படித்து முடித்ததற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது

இந்திய மருத்துவ ஆணையம் அறிவித்த பின்பு, வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகள் தேர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். அதன்பிறகு, வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கான தேர்வில் (FMG) தகுதி பெற்றவுடன், இரண்டு ஆண்டுகளுக்கு கட்டாய சுழற்சி மருத்துவப் பயிற்சி (CRMI) பெற வேண்டும். அதன்பிறகு, இந்திய நிலைமைகளின் படி மருத்துவப் பயிற்சிகள் வழங்கப்படும்.

வெளியுறவுத் துறை அமைச்சகத்திலிருந்து பெறப்பட்ட தகவலின்படி, மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஆவணங்களை சுமூகமான முறையில் வழங்குவதற்காக, கிவ் நகரில் உள்ள இந்திய தூதரகம், உக்ரைனில் உள்ள சம்பந்தப்பட்ட அனைத்து பல்கலைக் கழகங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது. இதில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் அவற்றைத் தீர்ப்பதற்கும், மாணவர்களுக்கு உதவுவதற்கும் தூதரகத்தின் இணையதளத்தில் அனைத்து விவரங்களும் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com