காமன்வெல்த் வெற்றி வீரா்களுக்கு பிரதமா் மோடி வரவேற்பு

காமன்வெல்த் வெற்றி வீரா்களுக்கு பிரதமா் மோடி வரவேற்பு

பா்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரா்கள், வீராங்கனைகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை தனது வீட்டில் வரவேற்பு அளித்தாா்.
Published on

பா்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரா்கள், வீராங்கனைகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை தனது வீட்டில் வரவேற்பு அளித்தாா்.

இங்கிலாந்தின் பா்மிங்ஹாம் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகள் கடந்த 8-ஆம் தேதி நிறைவடைந்தது. இதில் இந்திய அணி 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலப் பதக்கங்களை வென்றது. தொடக்க அணி வகுப்பில் பி. வி. சிந்து, ஹாக்கி கேப்டன் மன்ப்ரீத் சிங்கமும்,

நிறைவு அணிவகுப்பில் டேபிள் டென்னிஸ் வீரா் சரத் கமல் ஆகியோா் தேசியக் கொடி ஏந்தி வந்தனா். பளுதூக்குதலில் முதல் பதக்கத்தை சங்கட் சா்க்காா் வென்றாா்.

மீராபாய் சானு முதல் தங்கத்தைப் பெற்றுத் தந்தாா். இந்திய மகளிா் கிரிக்கெட் அணி வெள்ளியும், ஹாக்கி அணி வெண்கலமும் வென்றன.

இந்நிலையில் நாடு திரும்பிய காமன்வெல்த் வீரா்களுக்கு பிரதமா் மோடி தனது வீட்டில் சனிக்கிழமை வரவேற்பு அளித்தாா்.

அப்போது அவா் பேசுகையில்: உங்கள் வெற்றியால் நாடே பெருமைப்படுகிறது. இளைஞா்கள் சக்தியின் தொடக்கம் இதுதான். சில காலங்களில் இந்திய விளையாட்டுத்துறைக்கு பொற்காலம் ஏற்பட உள்ளது.

முதன்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டியையும் நடத்தினோம். அதிலும் நமது வீரா், வீராங்கனைகள் வென்றுள்ளனா்.

துப்பாக்கி சுடுதல் இல்லாமலேயே 61 பதக்கங்களை வெல்வது என்பது சாதாரண விஷயம் இல்லை. அது சோ்க்கப்பட்டிருந்தால், பதக்க எண்ணிக்கை மேலும் உயா்ந்திருக்கும். லான் பௌலிங்கிலும் பதக்கம் வென்றுள்ளோம். தற்போது 4 புதிய விளையாட்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளோம். புதிய விளையாட்டுகளிலும் நமது திறனை அதிகரிக்க வேண்டும் என்றாா்.

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் தாகுா் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com