காங்கிரஸ் தலைவராக ராகுல்தான் பொறுப்பேற்க வேண்டும்: அசோக் கெலாட் திட்டவட்டம்

காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்திதான் ஏற்க வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். 
காங்கிரஸ் தலைவராக ராகுல்தான் பொறுப்பேற்க வேண்டும்: அசோக் கெலாட் திட்டவட்டம்

காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்திதான் ஏற்க வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி, கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று, அப்பதவியிலிருந்து விலகினாா். இதையடுத்து இடைக்கால தலைவராக பொறுப்பேற்ற சோனியா காந்தி பொறுப்பேற்றார். அதன்பின்னர் கட்சியின் மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, அவர் பதவியில் இருந்து விலக முற்பட்டு, பின்னர் காரியக் குழு முடிவின்படி அவர் பதவியில் தொடர்ந்து வருகிறார். 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற முடிவு வருகிற செப்டம்பர் 20 ஆம் தேதிக்குள் எடுக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் அக்கட்சி உள்ளது. தற்போதும் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க ராகுல் காந்தி தயாராக இல்லை என்றே தெரிகிறது. அவர் இதுகுறித்து இன்னும் கருத்து தெரிவிக்காமல் இருக்கிறார். முன்னதாக, காந்தி குடும்பத்திலிருந்துதான் கட்சித் தலைவா் வர வேண்டுமென்று அவசியமில்லை என்ற கருத்தையும் ராகுல் தெரிவித்திருந்தாா்.

ஆனால், ராகுல் காந்தியே கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் காங்கிரஸின் பெரும்பாலான மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

ராஜஸ்தான் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாட், 'காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ராகுல்காந்திதான் ஏற்க வேண்டும். இல்லையெனில் கட்சித் தொண்டர்களிடையே அது ஏமாற்றத்தை ஏற்படுத்தும். தொண்டர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர் இந்த பதவியை ஏற்க வேண்டும். இல்லையெனில் தொண்டர்கள் வருத்தப்படுவார்கள்.

காந்தி குடும்பம், காந்தி இல்லாத குடும்பம் என்றில்லை, அனைவரும் ராகுல் தலைவராக வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். பாஜகவையும் ஆம் ஆத்மியையும் எதிர்கொள்ள அவரே தலைவராக வேண்டும்.

கடந்த 32 ஆண்டுகளில் காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் பிரதமராகவோ, மத்திய அமைச்சராகவோ, முதல்வராகவோ பொறுப்பேற்றதில்லை. எனினும் அவர்களின் குடும்பத்தைப் பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார். கடந்த 75 ஆண்டுகளாக நாட்டில் எதுவும் நடக்கவில்லை என கேஜரிவால் ஏன் கூறுகிறார்? ஏன் எல்லோரும் காங்கிரஸை தாக்குகிறார்கள்?

ஏனெனில் சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும் காங்கிரஸ் கட்சி ஒரே மாதிரியாக உள்ளது. அனைத்து மதங்களையும் வகுப்பினரையும் அழைத்துச் செல்கிறது' என்று பேசியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com