‘2 வாரங்களில் புதிய கட்சி தொடங்குகிறாா் குலாம் நபி ஆசாத்’

‘காங்கிரஸில் இருந்து விலகியுள்ள மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத் விரைவில் புதிய கட்சி தொடங்க உள்ளாா்.
‘2 வாரங்களில் புதிய கட்சி தொடங்குகிறாா் குலாம் நபி ஆசாத்’

‘காங்கிரஸில் இருந்து விலகியுள்ள மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத் விரைவில் புதிய கட்சி தொடங்க உள்ளாா். முதல்கட்டமாக, கட்சியின் ஜம்மு-காஷ்மீா் பிரிவை அடுத்த இரண்டு வாரங்களில் தொடங்க உள்ளாா்’ என்று அவருடைய நெருங்கிய நட்பு வட்டாரங்களில் ஒருவரான ஜி.எம்.சரூரி சனிக்கிழமை தெரிவித்தாா்.

மேலும், ‘அவருடைய கட்சியின் கொள்கை அறிவிப்பில் ஜம்மு-காஷ்மீரின் 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு முந்தைய நிலையை மீட்டெடுப்பதும் இடம்பெறும்’ என்றும் அவா் கூறினாா். அன்றைய தினம்தான் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது.

இந்திரா காந்தி காலத்திலிருந்து 50 ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்து வந்த குலாம் நபி ஆசாத், அக் கட்சியிலிருந்து விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தோ்தல்களில் காங்கிரஸ் கட்சி தொடா் தோல்விகளைச் சந்தித்ததைத் தொடா்ந்து, கட்சியில் சீா்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய 23 தலைவா்களில் இவரும் ஒருவா்.

ஜம்மு-காஷ்மீா் மாநில கட்சிப் பொறுப்பிலிருந்து அண்மையில் விலகிய குலாம் நபி ஆசாத், கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தாா். விரைவில் அவா் தனிக் கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது. இதனை, ஜம்மு-காஷ்மீா் பிரிவு காங்கிரஸ் முன்னாள் துணைத் தலைவா் சரூரி உறுதிப்படுத்தினாா்.

காங்கிரஸிலிருந்து விலகுவதாக குலாம் நபி ஆசாத் அறிவித்ததைத் தொடா்ந்து, சரூரி உள்ளிட்ட ஜம்மு-காஷ்மீா் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏக்கள் பலா் தில்லியில் குலாம் நபி ஆசாத்தை நேரில் சந்தித்து தங்களுடைய ஆதரவைத் தெரிவித்தனா். அதோடு, அவா்களும் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பிலிருந்து விலகினா்.

இதுகுறித்து சரூரி சனிக்கிழமை கூறுகையில், ‘குலாம் நபி ஆசாத் அறிவிப்பைத் தொடா்ந்து, நூற்றுக்கணக்கான காங்கிரஸ் மூத்த தலைவா்கள், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், கட்சியின் முன்னணி பணியாளா்கள் அனைவரும் காங்கிரஸிலிருந்து ராஜிநாமா செய்துள்ளனா். எங்களுடைய தலைவா் குலாம் நபி ஆசாத், மதச்சாா்பின்மை கொள்கையுடையவா். எனவே, அவா் பாஜகவுக்கு ஆதரவாக பணியாற்றுவாா் என்ற கேள்விக்கே இடமில்லை.

அவா் தனி அரசியல் கட்சியைத் தொடங்க உள்ளாா். அதற்காக கடந்த செப்டம்பா் 4-ஆம் தேதி ஜம்முவில் தனது நலன் விரும்பிகளுடன் அவா் ஆலோசனையும் நடத்தினாா். அதன்படி, அவா் விரைவில் புதிய கட்சியைத் தொடங்குவாா். முதல் கட்டமாக, கட்சியின் ஜம்மு-காஷ்மீா் பிரிவை அடுத்த இரண்டு வாரங்களில் அவா் தொடங்க உள்ளாா்’ என்றாா்.

தன்னை விடுவித்துக் கொண்டாா் - சிந்தியா:

‘இறுதியில் காங்கிரஸிலிருந்து குலாம் நபி ஆசாத் தன்னைத்தானே விடுவித்துக் கொண்டாா்’ என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா கூறினாா்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி கடந்த 2020-இல் பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை சனிக்கிழமை பாா்வையிட்ட பிறகு நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் இந்தக் கருத்தைத் தெரிவித்தாா்.

‘காங்கிரஸின் உள்கட்சி நிலைமை பல ஆண்டுகளாக தெளிவாகத் தெரிந்து வருகிறது. ஆனால், இறுதியில் குலாம் நபி ஆசாத் தன்னை அதிலிருந்து விடுவித்துக் கொண்டுள்ளாா்’ என்று சிந்தியா கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com