காலாவதியாகும் 50 லட்சம் 'டோஸ்' கோவிஷீல்டு மருந்து!

பிப்ரவரி இறுதியில் சுமார் 50 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மருந்துகள்  காலாவதியாகவிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கோவிஷீல்டு மருந்துகள் காலாவதியாகும் அபாயம்
கோவிஷீல்டு மருந்துகள் காலாவதியாகும் அபாயம்


நாடு முழுவதும் பல லட்சம் பேர் இன்னமும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல், தொற்று பாதிப்புக்குள்ளாகும் அபாயத்துடன் இருக்கும்  நிலையில், பிப்ரவரி இறுதியில் தனியார் மருத்துவமனைகள் வசமுள்ள சுமார் 50 லட்சம் கோவிஷீல்டு மருந்துகள் காலாவதியாகவிருப்பதாக  புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் இதுவரை 167.87 கோடி டோஸ் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. 

ஒரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை 94.68 கோடியாகவும், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை 71.95 கோடியாகவும் இருக்கிறது. முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி (பூஸ்டர் டோஸ்) இதுவரை 1.29 கோடி பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

அதேவேளையில், நாடு முழுவதுமுள்ள ஏராளமான தனியார் மருத்துவமனைகளில் சுமார் 50 லட்சம் டோஸ் கோவிஷீல்டு கரோனா தடுப்பு மருந்துகள் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாதத் தொடக்கத்தில் பயன்படுத்தப்படாமலேயே காலாவதியாகும் அபாயம் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக இந்திய மருத்துவக் கழகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இதுவரையிலான கணக்கெடுப்பில்  கிடைத்த தகவலின் அடிப்படையில் 50 லட்சம் டோஸ் மருந்துகள் காலாவதியாகி வீணாகலாம் என  மதிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இந்த அளவு மேலும் அதிகரிக்கலாம்  என்றும் அஞ்சப்படுகிறது.

இந்த கணக்கெடுப்பைத் தொடர்ந்து, தனியார் மருத்துவமனைகளில் காலாவதியாகவிருக்கும் மருந்துகளை திரும்பப் பெற்றுக் கொள்ள அல்லது பதிலாகப் புதிய மருந்துகளை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடமும் கோவிஷீல்டு மருந்து தயாரிப்பு  நிறுவனமான சீரம் நிறுவனத்திடமும் கோரிக்கையை முன்வைத்துள்ளது.

இதுபற்றி இந்திய மருத்துவக் கழகத்தின் தேசியத் தலைவர் டாக்டர் சகஜானந்த் பிரசாத் சிங் கூறுகையில், நமது தேசிய மற்றும் மாநில அமைப்புகள் இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகளிடமும் சீரம் நிறுவனத்திடமும் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

ஆனால், இந்திய மருத்துவக் கழகத்தின் கோரிக்கை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளப்பட வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. ஏனென்றால், சீரம் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளோ, எங்களது மருந்து தயாரிப்பு நிறுவனத்தில், மருந்துகளை திரும்பப் பெற்றுக் கொள்வது என்பது  கொள்கையிலேயே இல்லை. எந்த வகையிலும் பயன்படுத்தாத மருந்துகளை திரும்பப் பெறுவதோ, அதற்கு மாற்றாக புதிய மருந்துகளை அளிப்பதோ இயலவே இயலாது என்று திட்டவட்டமாகக் கூறுகிறார்கள்.

இது குறித்து அவர்கள் கூறுவது என்னவென்றால், எங்களிடமிருந்து வாங்கிய மருந்துகளை அவர்கள் எவ்வாறு பாதுகாத்தார்கள், எந்த குளிர்நிலையில் வைத்திருந்தார்கள் என்பதற்கான உத்தரவாதம் இல்லை. அவை உரிய  முறையில் பாதுகாக்கப்பட்டது என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. எனவே, அதனை நாங்கள் திரும்ப எடுத்துக் கொண்டு, வேறோர் இடத்தில்  பயன்படுத்துவது என்பது சரியான பயன்பாட்டு முறையாக இருக்காது, மிகவும் அபாயத்துக்குரிய விஷயமாகவும் இருக்கிறது என்கிறார்.

ஆனால், தனியார் மருத்துவமனைகளோ, தங்களிடமிருக்கும் விரைவில் காலாவதியாகும் மருந்துகளை திரும்ப எடுத்துக் கொண்டு, நீண்ட பயன்பாட்டுக் காலம் கொண்ட மருந்துகளை வழங்குமாறு கோருகின்றன.

அதாவது, மத்திய அரசு தங்களிடமிருக்கும் மருந்துகளை எடுத்து, பிப்ரவரி  மாதத்துக்குள் நடக்கும் சிறப்பு முகாம்களில் பயன்படுத்திக்கொண்டு, புதிய மருந்துகளை எங்களுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.

ஆரம்பத்தில் எங்களிடம் ஏராளமானோர் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டனர். ஆனால், மத்திய, மாநில அரசுகள் இலவசமாக சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்தியதும், எங்களிடம் மக்கள் வருவது குறைந்ததால், இந்த அளவுக்கு மருந்து பயன்படுத்த முடியாமல் தேங்கிவிட்டதாகவும் கூறுகிறார்கள்.

இது குறித்து, இந்திய மருத்துவக் கழகத்தின் மருத்துவமனைச் சங்க நிர்வாகி டாக்டர் சஞ்சய் பாட்டீல் கூறுகையில், பல ஏழை நாடுகளில், கரோனா தடுப்பூசி கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகிவரும் நிலையில், தனியார் மருத்துவமனைகளில், பயன்படுத்த வேண்டிய தடுப்பூசியை காலாவதியாக விடுவது மிகப்பெரிய குற்றம் என்கிறார்.

இதுவரை கிடைத்த புள்ளிவிவரங்கள் 50 லட்சம் மருந்துகள் என்கிறது. இது மேலும் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. அது தொடர்பான தகவல்களையும் திரட்டி வருகிறோம் என்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com