‘பிரதமருக்கு எந்த பாதுகாப்பு குறைபாடும் ஏற்படவில்லை’: பஞ்சாப் முதல்வர் பதில்

பிரதமர் மோடிக்கு பஞ்சாபில் எந்தவிதமான பாதுகாப்பு குறைபாடும் ஏற்படவில்லை என அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி விளக்கமளித்துள்ளார்.
சரண்ஜித் சிங் சன்னி
சரண்ஜித் சிங் சன்னி

பிரதமர் மோடிக்கு பஞ்சாபில் எந்தவிதமான பாதுகாப்பு குறைபாடும் ஏற்படவில்லை என அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி விளக்கமளித்துள்ளார்.

பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் இந்தாண்டு நடைபெற உள்ளது.

இந்நிலையில், இன்று பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வதாக இருந்தது. இதற்காக ஹெலிகாப்டர் மூலமாக நிகழ்விடத்திற்கு வர இருந்த பிரதமர் மோடியின் பயணத்திட்டம் இறுதி நேரத்தில் மாற்றியமைக்கப்பட்டது.

அதன்படி சாலை வழியாக பெரோஸ்பூர் சென்றார். பிரதமர் மோடி செல்லும் வழியில் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்ததால் மேம்பாலத்தில் பிரதமரின் பாதுகாப்பு வாகனங்கள் 15-20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. 

இந்நிலையில் ஒரு சில காரணங்களால் பிரதமரின் பெரோஸ்பூர் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. எனவே, பாதுகாப்பு கருதி பிரதமரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக மத்திய உள்துறை விளக்கமளித்தது. மேலும் இதுதொடர்பாக மாநில அரசு அறிக்கை சமர்ப்பிக்கவும் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, “பிரதமர் மோடியின் திடீர் பயணத்திட்ட மாற்றம் குறித்து எந்தத் தகவலும் எங்களுக்கு வரவில்லை. மோசமான வானிலை மற்றும் போராட்டக்காரர்களின் எதிர்ப்பு காரணமாக பயணத்தை ரத்து செய்யுமாறு பிரதமரிடம் வலியுறுத்தினோம். பிரதமர் வருகையின் போது பாதுகாப்பு குறைபாடு எதுவும் ஏற்படவில்லை.பிரதமருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. பிரதமர் மோடியின் பயணம் ரத்தானதற்கு வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

மேலும்,  “பிரதமர் மோடியின் இன்றைய பயணத்தின் போது பாதுகாப்பு குறைபாடுகள் ஏதேனும் ஏற்பட்டிருந்தால், இதுகுறித்து விசாரணை நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் பயணத்திட்டம் திடீரென ரத்தானது குறித்து பாஜகவினர் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com