பிரதமர் பாதுகாப்பு விவகாரம்: விசாரணைக் குழுவின் தலைவர் நியமனம்

பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு குளறுபடியை விசாரிக்கும் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்றத்தின் நீதிபதி இந்து மல்கோத்ராவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை நியமித்துள்ளது.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு குளறுபடியை விசாரிக்கும் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்றத்தின் நீதிபதி இந்து மல்கோத்ராவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை நியமித்துள்ளது.

இதுகுறித்து உச்சநீதிமன்றம் இன்று வெளியிட்ட உத்தரவில்,

பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி இந்து மல்கோத்ரா செயல்படுவார். மேலும், குழுவின் உறுப்பினர்களாக பஞ்சாப் காவல்துறை தலைவர்(பாதுகாப்பு), தேசிய புலனாய்வு நிறுவனத்தின் இயக்குநர், பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்ற பதிவாளர் ஆகியோர் இடம்பெறுவர்.

பிரதமா் மோடி தில்லியில் இருந்து ஜன.5 காலை பஞ்சாப் மாநிலம், பதிண்டா விமான நிலையத்தை சென்றடைந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்துக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக அவரால் பயணத்தைத் தொடர முடியவில்லை. வானிலை சீரடைவதற்கு 20 நிமிஷங்கள் காத்திருந்தார்.

பின்னா், சாலை வழியாகவே தேசிய தியாகிகள் நினைவிடம் செல்ல முடிவு செய்யப்பட்டது. சாலை வழியாகச் செல்வதற்கு 2 மணி நேரமாகும். சாலைவழிப் பயணத்துக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தருமாறு காவல் துறை டிஜிபியிடம் தெரிவிக்கப்பட்டது. ஏற்பாடுகளை அவா் உறுதிசெய்த பிறகு பிரதமா் மோடி பயணத்தைத் தொடா்ந்தார்.

ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திலிருந்து சுமார் 30 கி.மீ. முன்பு பிரதமரின் வாகனம் மேம்பாலம் ஒன்றை அடைந்தபோது போராட்டக்காரா்கள் சிலா் சாலையை மறித்திருப்பது தெரியவந்தது. அவா்களின் மறியலால் மேம்பாலத்திலேயே அவா் 15-20 நிமிஷங்கள் காக்க வைக்கப்பட்டிருந்தார். பாதுகாப்புக் குறைபாட்டுக்குப் பிறகு பிரதமா் மோடி பதிண்டா விமான நிலையத்துக்கே திரும்பிச் சென்றுவிடலாம் என முடிவு செய்யப்பட்டது.

இதன் காரணமாக தேசிய தியாகிகள் நினைவிடத்துக்குச் செல்ல முடியாதது மட்டுமன்றி, ஃபெரோஸ்பூரில் நடைபெறவிருந்த வளா்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவிலும் பிரதமரால் பங்கேற்க முடியவில்லை. 

இந்த விவகாரத்தில் மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையே கடுமையான வார்த்தைப் போர் நிலவியதையடுத்து, இரு அரசுகளும் நியமித்த விசாரணைக் குழுவிற்கு தடை விதித்து, உச்சநீதிமன்ற நேரடி கண்காணிப்பின் கீழ் குழு அமைத்து உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com