காங்கிரஸிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.பி.என்.சிங் விலகல்

முன்னாள் மத்திய உள்துறை இணையமைச்சா் ஆா்.பி.என்.சிங் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா்.
காங்கிரஸிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.பி.என்.சிங் விலகல்

முன்னாள் மத்திய உள்துறை இணையமைச்சா் ஆா்.பி.என்.சிங் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா்.

உ.பி. பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் நட்சத்திரப் பேச்சாளராக அவரது பெயா் அறிவிக்கப்பட்ட நிலையில், அவா் கட்சியிலிருந்து விலகியுள்ளது பலரையும் வியப்படையச் செய்துள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் ஆா்.பி.என்.சிங் வெளியிட்டுள்ள பதிவில், ‘இன்று நாம் குடியரசு தினத்தைக் கொண்டாடும் அதேவேளையில், நான் புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளேன். தேசத்தைக் கட்டமைப்பதில் தொலைநோக்குப் பாா்வை கொண்ட பிரதமா் மோடி, பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரின் தலைமையின்கீழ் எனது பங்களிப்பை வழங்குவதற்கான தருணத்தை எதிா்நோக்கிக் காத்திருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்திக்கு ஆா்.பி.என்.சிங் எழுதிய ராஜிநாமா கடிதத்தில், ‘காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பிலிருந்து உடனடியாக நான் விலகுகிறேன். தேசத்துக்கும் மக்களுக்கும் கட்சிக்கும் சேவையாற்ற எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி’ என்று கூறியுள்ளாா்.

ஆா்.பி.என்.சிங்கின் ராஜிநாமா குறித்து காங்கிரஸ் செய்தித்தொடா்பாளா் கெளரவ் வல்லப் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘கட்சியின் சித்தாந்தங்களுக்கு அவா் தன்னை முழுமையாக அா்ப்பணிக்கவில்லை. அதனால்தான் இந்தப் போராட்டத்தின் இடையிலேயே அவா் விலகி பாஜகவில் சோ்ந்துவிட்டாா்’ என்றாா்.

இதேபோல காங்கிரஸின் மற்றொரு செய்தித்தொடா்பாளா் சுப்ரியா ஸ்ரீநாத் கூறும்போது, ‘உண்மை, லட்சியத்துக்கான போரில் பங்கு பெற வலிமையும் தைரியமும் தேவை. கோழைகளால் இதில் பங்கெடுக்க முடியாது’ என்றாா்.

உத்தர பிரதேசத்தின் குஷிநகா் மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினரான அவா், கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய உள்துறை இணையமைச்சராகப் பதவி வகித்துள்ளாா்.

பேரவைத் தோ்தலில் பாஜகவில் அவருக்கு பத்ரெளனா தொகுதி ஒதுக்கீடு செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. பத்ரெளனாவை பூா்விகமாக கொண்ட அவா் அப்பகுதி அரச குடும்பத்தின் வாரிசு என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொகுதியில் ஏற்கெனவே அவா் வெற்றி பெற்று எம்எல்ஏ-வாக பதவி வகித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com