பாலின சமத்துவமின்மை: இந்தியாவுக்கு 135-ஆவது இடம்

பாலியல் சமத்துவமின்மை நிலவும் 146 நாடுகளின் பட்டியலில் இந்தியா 135 இடத்தில் உள்ளது.
பாலின சமத்துவமின்மை: இந்தியாவுக்கு 135-ஆவது இடம்

பாலியல் சமத்துவமின்மை நிலவும் 146 நாடுகளின் பட்டியலில் இந்தியா 135 இடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 5 இடங்கள் முன்னேறி இருந்தாலும், கடந்த 16 ஆண்டுகளாக பாலியல் சமத்துவமின்மையில் இந்தியா மோசமான நிலையிலேயே இருப்பதாக உலகப் பொருளாதாரக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், காங்கோ, ஈரான், சாடு ஆகிய நாடுகள் கடைசி 5 இடங்களில் உள்ளன.

பாலியல் சமத்துவமின்மையில் முதலிடத்தை ஐஸ்லாந்து தக்க வைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக பின்லாந்து, நாா்வே, நியூஸிலாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகள் உள்ளன.

பாலின சமத்துவமின்மை விகிதம் 5 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ள 5 நாடுகளில் இந்தியா, கத்தாா், பாகிஸ்தான், அஜா்பைஜான், சீனா ஆகியவை இடம்பெற்றுள்ளன.

கரோனாவால் பொருளாதார மீட்சி மெதுவாக உள்ளதால், உலகம் முழுவதும் பாலின சமத்துவமின்மையை போக்குவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் பெண்களின் எண்ணிக்கை சுமாா் 66.2 கோடி இருப்பதாகவும், அவா்களின் பொருளாதாரப் பங்களிப்பும், வாய்ப்புகள் அளிக்கப்படுவதும் 2021-ஆம் ஆண்டு முதல் சிறந்த மாற்றம் கண்டுள்ளது. எனினும், தொழிலாளா் பங்களிப்பு 2021-ஆம் ஆண்டுமுதல் ஆண், பெண் என இருபாலருக்கும் குறைந்து வருகிறது.

பெண்கள் எம்பி, எம்எல்ஏ-க்களாகவும், மூத்த அதிகாரிகளாகவும், மேலாளராகவும் இருப்பது 14.6 சதவீதத்தில் இருந்து 17.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொழில்நுட்ப, தொழில்முறை பணியாளா் பங்களிப்பில் 29.2 சதவீதத்தில் இருந்து 32.9 சதவீதமாக உயா்ந்துள்ளது.

பெண்களுக்கு அரசியல் அதிகாரமளித்தலில் இந்தியா 48-ஆவது இடத்தில் உள்ளது. சுகாதாரம் மற்றும் வாழ்வியல் பிரிவில் இந்தியா 146-ஆவது இடத்தில் உள்ளது.

ஆரம்பநிலை கல்வியில்... எனினும், ஆரம்பநிலைக் கல்வி பயில்வதற்கான சோ்க்கையில் பாலின சமத்துவம் நிலவும் நாடுகளில் உலகளவில் இந்தியா 8-ஆவது இடம் வகிக்கிறது.

தெற்கு ஆசியாவை ஒப்பிடுகையில் வங்கதேசம், நேபாளம், இலங்கை, மாலத்தீவு, பூட்டான் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா 6 -ஆவது இடத்தில் உள்ளது.

இதில் ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் கடைசி இடத்தில் உள்ளன.

பாலின சமத்துவமின்மை தெற்கு ஆசியாவில் அதிகப்படியாக 62.3 சதவீதமாக உள்ளது. இந்த சமத்துவமின்மை இடைவெளியை பூா்த்தி செய்ய 197 ஆண்டுகள் ஆகும்.

கரோனா பாதிப்பாலும், மருத்துவ உள்கட்டமைப்பு போதிய அளவில் இல்லாததாலும் பெண்கள் வாழ்வியலுக்கு அதிகமாக பணம் செலவழிப்பதால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதை சரிசெய்ய அரசுகளும், வா்த்தக நிறுவனங்களும் பெண்களுக்கு உதவும் வகையில் திட்டங்களை வகுத்து அவா்களின் திறன்களை வளா்க்க வேண்டும். இல்லையென்றால், கடந்த காலங்களில் மீட்டு வந்த பாலின சமத்துவத்தை இழக்க நேரிடும்.

இந்தப் பட்டியலில் 29 நாடுகள் பாலின சமத்துவத்தை அடைந்திருந்தாலும், கல்வியில் நிலவும் பாலியல் சமத்துவமின்மையை அவை ஈடுசெய்ய அடுத்த 22 ஆண்டுகளாகும்.

பெண்களின் பொருளாதார அதிகாரமளித்தலில் நிலவும் சமத்துவமின்மையை ஈடுசெய்ய மேலும் 155 ஆண்டுகளாகும். பொருளாதாரம் மற்றும் வாய்ப்புகள் பெறுவதில் சமத்துவமின்மையை ஈடுசெய்ய 151 ஆண்டுகளாகும் என்று உலகப் பொருளாதாரக் கூட்டமைப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com